எழுதியவர் திரு. முருகபூபதி அவர்கள்.
தவமண்ணர் தோய்ந்துவிட்டு வந்து, ‘ சீலன் என்ன குடிக்கிறீர்? கஃபேயா ? ரீயா? நான் எனக்கு கஃபே தயாரிக்கப்போகிறேன்.’ என்றார்
சுவிஸில் கோப்பி பானத்தை கஃபே என்றுதான் அழைக்கிறார்கள். அண்ணை எனக்கும் கஃபே தாருங்கள். மெத்த வேண்டாம். சின்ன கப்பில் போதும்’ என்றான் சீலன்.
சுவிஸில் கோப்பி பானத்தை கஃபே என்றுதான் அழைக்கிறார்கள். அண்ணை எனக்கும் கஃபே தாருங்கள். மெத்த வேண்டாம். சின்ன கப்பில் போதும்’ என்றான் சீலன்.
‘ எத்தனை கிண்ணத்தில் இட்டாலும் அவை அத்தனையின் சுவை ஒன்றாகும்’ என்று கண்ணதாசன் படியிருக்கிறார் தெரியுமா? என்று கண்ணைச்சிமிட்டிக்கொண்டு சொன்னார் தவமண்ணன்.
‘ அண்ணை உங்கட கண் சிமிட்டலுக்கும் அர்த்தம் இருக்கண்ணை. கவிஞர்ட பாடலுக்கும் அர்த்தம் இருக்கண்ணை’ என்று சொல்லிச்சிரித்தான் சீலன்.
தவமண்ணன் சீலனின் முகத்தை உற்றுக்கவனித்தார். அவனது முகத்தில் மாற்றம் தோன்றியிருப்பதை அவதானித்தார்.
‘ சீலன் உம்மட முகம் இன்றைக்கு கொஞ்சம் பிரகாசமாக இருக்குது தம்பி. பத்மகலா இன்றைக்கு தொடர்புகொண்டாவா? காதலிகள் பேசினால் உவப்பாகவும் இருக்கும் உபத்திரவமாகவும் இருக்கும்’.
‘ அண்ணை உங்கட முன் அனுபவம் பேசுகிறதா? என்னில் ஏதும் மாற்றம் உங்கட கண்ணுக்குத்தெரிந்தால் அதற்குக்காரணம் இன்றைக்கு நான் சந்தித்த ஒரு பேராசிரியரும் அவர் எனனக்குச்சொன்ன கதையும்தான்’ என்றான் சீலன்.
தவமண்ணன் இரண்டு கப்பில் கோப்பி தயாரித்துக்கொண்டு வந்து சீலனிடம் ஒன்றைக்கொடுத்துவிட்டு அவன் முன்னால் அமர்ந்தார்.
சீலன் பேராசிரியர் குமாரவேலையும் அவர் குறிப்பிட்ட விஞ்ஞானி ரிச்சட்டையும் பற்றி தவமண்ணனிடம் விபரித்தான். ஆவி பொங்கும் கோப்பியை இருவரும் ரசித்து ருசித்தனர்.
அதில் இனிமைகலந்த கசப்பு. வாழ்க்கையின் தத்துவத்தை இந்த சாதாரண கோப்பியும் உணர்த்துவதாக சீலனின் மனதிற்கு பட்டது.
‘ அண்ணை இந்தக்கோப்பியை பற்றி என்ன நினைக்கிறீங்கள்?’ சீலன் கேட்டான்.
‘ என்ன… கோப்பி… அவ்வளவுதான். இதில் நினைப்பதற்கு என்ன இருக்கிறது?’
‘ ஆம். சாதாரணமான கோப்பிதான். அதற்குப்பின்னால் மிக நீண்ட கதை இருக்கிறது என்பதை நாங்கள் மறந்துபோறம் அண்ணை.’
‘ சீலன் நீர் என்ன சொல்லுறீர்? எனக்குப்புரியவில்லை?’
‘ அண்ணை… கோப்பி தயாரிக்க கேத்தலில் தண்ணீரை சுடவைத்தீர்கள். தண்ணீருக்காக பைப்பைத்திறந்தீர்கள். மின்சாரம், தண்ணீர், கோப்பி, சீனி, பால், கப், கரண்டி….இப்படி எத்தனையோ இணைந்துதானே இப்பொழுது நாங்கள் இரண்டுபேரும் இந்த சுவையான கோப்பியை பருகிக்கொண்டிருக்கிறோம். சில நிமிடங்களில் கோப்பியை அருந்திவிட்டு அடுத்த வேலையை கவனிப்போம். ஆனால் இந்த பால்கோப்பியின் பின்னால் இருந்த மனித உழைப்பை விஞ்ஞான கண்டுபிடிப்பைப்பற்றி துளியளவேணும் யோசித்திருக்கிறோhமா?’
தவமண்ணன் சீலனின் முகத்தை உற்றுப்பார்த்தார். சில கணங்கள் அவர் ஏதும் பேசவில்லை.
‘ என்ன அண்ணன்? ஏதாவது சொல்லுங்களேன்?’
‘ இன்றைக்கு நீர் யாரையோ சந்திச்சிருக்கிறீர்….அல்லது ஏதோ ஒரு புத்தகம் படிச்சிருக்கிறீர்… என்பது மாத்திரம்தான் எனக்குப் புரியுது. நான் அன்றைக்குப்பார்த்த சீலன் இன்றைக்கு இல்லை. ஏதோ ஒரு ரஸவாதம் உம்மிடம் நிகழ்ந்திருக்கு. அதற்கான ரிஷி மூலம்…நதி மூலம் என்ன தம்பி.? ‘
‘ எங்கேயண்ண படிக்க நேரம்? நான் வரும்பொழுது புத்தகங்கள் கொண்டுவரவில்லை. வந்த இடத்திலும் புத்தகங்கள் கிடைக்கவில்லை. ஆனால் இன்றைக்கு விமான நிலையத்தில் ஓரு மனிதரை வழியனுப்பியபொழுது அவர் எனது மனதில் விதைத்துவிட்ட சிந்தனைதான் உங்களிடம் இந்தக்கோப்பியின் புதிர் பற்றி பேசவைத்தது.’
தவமண்ணன் – காலியாகவிருந்த இருவரும் அருந்திய கோப்பி கப்புகளை எடுத்துச்சென்று கழுவிவைத்துவிட்டு திரும்பிவந்தார்.
‘ நீர் கோப்பி பற்றி சொன்ன பிறகுதான் எனக்குள்ளும் பல யோசனைகள் பிறக்குது தம்பி. பல விடயங்களுக்குள்ளதான் நாங்கள் எங்களை தேடிப்பார்க்கிறோம். அது சரி… நீர் சந்தித்தவர்…. ஆள் சுவிஸ்காரனோ?’
‘ இல்லை…இல்லை…. அவர் எங்கட ஊர் பேராசிரியர. உப்சலா பல்கலைக்கழகத்துக்கு வந்துவிட்டு திரும்புகையில் எதிர்பாராமல் சந்தித்தவர். பெயர் குமாரவேல்.’ என்றான் சீலன்.
‘ எங்கேயோ கேள்விப்பட்ட பெயராகத்தான் இருக்கிறது. சரி சொல்லும் அவர் அப்படி என்னதான் உமக்குச்சொல்லிவிட்டார்?’ – தவமண்ணன் தோளில் கிடந்த டவலை குளியலறையில் விரித்து வைத்துவிட்டு திரும்பினார்.
சீலனும் எழுந்து நடந்தவாறே குமாரவேல் குறிப்பிட்ட விஞ்ஞானி ரிச்சர்ட் பற்றியும் அவரின் மரணம் பற்றியும் விபரித்தான்.
அமைதியாகக்கேட்டுக்கொண்டிருந்துவிட்டு தவமண்ணன் நீண்ட பெருமூச்சை விட்டார்.
‘ தம்பி…. அந்த குமாரவேலர் தன்னை அந்த விஞ்ஞானி ரிச்சரட்;டிடம் தேடியிருக்கிறார். நீர் உம்மை அந்த குமாரவேலரிடம் தேடியிருக்கிறீர். இப்பொழுது நான் உம்மிடத்தில் என்னைத்தேடிக்கொண்டிருக்கிறன். இது மரதன் ஓட்;டம் தம்பி. நிற்காது. தேடல்தான் வாழ்க்கை. சில நாட்களாகத்தான் நான் அந்த வேலைக்குப்போய்வந்துகொண்டிருக்கிறன். அங்கே நீண்ட காலமாக வேலை செய்யிற எங்கட யாழ்ப்பாணத்து ஆட்கள் சிலருடன் நட்பாகியிருக்கிறன். அவர்களின் கதைகளையும் கேட்டிருக்கிறன். அவையள் இங்கே நிரந்தர வதிவிட அனுமதியும் நிரந்தர வேலையும் ஓடித்திரிவதற்கு கார்களும் வாங்கியிருப்பவை. அவர்களும் கனவுகளோடதான் காலத்தை கடத்துகினம். சிலருக்கு சுவிஸ் வாழ்க்கை பிடிக்கவில்லை. அவர்கள் அவுஸ்திரேலியாவுக்குப்போயிருக்கலாம். லண்டனுக்குப்போயிருக்கலாம். என்று புலம்பிக்கொண்டிருக்கிறார்கள். அங்கே தங்கட பிள்ளைகள் ஆங்கிலம் படித்திருக்கலாமாம். கெதியா வீடு வாங்கியிருக்கலாமாம்? இன்னும் சிலருடைய கனவுகள் வேறு மாதிரி… முடிந்தவரையில் உழைத்து சேமித்துக்கொண்டு ஊருக்குத்திரும்பிவிடவேணுமாம். தொடர்ந்து இங்கே இருந்தால் ஊரில் இருக்கும் சொந்த பந்தங்கள் அவரை எடுத்துவிடு…இவரை எடுத்துவிடு… என்ற ஓயாத தொலைபேசி நச்சரிப்பாம். இதில பாரும்… ஒருவர் சொன்ன கதை வெகு சுவாரஸ்யம். அவர்ட பெயர் குணரத்தினம். அவரின்ட அண்ணர் அவுஸ்திரேலியாவில் எண்பத்தி மூன்று அடியோடு குடும்பத்துடன் போனவராம். இக்கரைக்கு அக்கரை பச்சை என்றுதானாம் தன்னோடு ரெலிபோண்ல புலம்பிக்கொண்டிருக்கிறாராம். ஒரு நாள் சொன்னாராம். வெளிநாட்டுக்கு வந்த பலர் ஏதேதோ பத்திரிகைகளில் எழுதிப்போட்டு புலம்பெயர்ந்தோர் இலக்கியம் படைப்பதாக பேசுகினமாம். தான் சிலதை படிச்சும் பார்த்தவராம். அது எல்லாம் புலம்பல் இலக்கியமாம். அதனால் உந்த எழுத்தாளர்களுக்குப்பின்னால அலையிறதை விட்டுப்போட்டு முடிஞ்சவரைக்கும் உழைச்சுக்கொண்டு ஊருக்குத்திரும்புற வழியைப்பார் எண்டும் சொன்னவராம் அந்த அவுஸ்திரேலியா அண்ணர்…. எப்படி இருக்குது சீலன்…?’ தவமண்ணன் சொல்லிவிட்டு உரத்துச்சிரித்தார்.
‘ அண்ணை நீங்கள் சொல்லும் குணரத்தினமும் எழுத்தாளரா?’ எனக்கேட்டான் சீலன்.
‘ இருக்கவேண்டும். சாப்பாட்டு நேரத்தில் அந்தப்பெடியனின் கையில் ஏதாவது ஒரு புத்தகம் இருப்பதையும் பார்த்திருக்கிறன். நானும் அங்கே வேலைக்குச்சேர்ந்து சில நாட்கள்தானே? ஏன் கேட்டீர்?’
‘ இங்கே வந்ததுமுதல் கடந்த கால யோசனைகளில்தான் மூழ்கியிருக்கிறன். பலரையும் சந்தித்து பழகவேண்டும். ர்ழஅந ளுiஉம பொல்லாத நோய். அதிலிருந்து விடுபடவேண்டும். அதற்கு புதிய தொடர்புகள் தேவை அண்ணை.’
‘ புதிய தொடர்புகள் சிக்கலையும் தரும் தம்பி. வெளிநாட்டில் அவதானம் தேவை. முதலில் வேலையொன்றைத்தேடிக்கொள்ளும். ஏதும் கோர்ஸ் படியும். ஊரில் உம்மட அம்மா பட்ட கடனை அடையும். அதற்கு முன்பு அவசரப்பட்டு நண்பர்களைத்தேடிக்கொள்ளவேண்டாம். எந்தப்புற்றில் எந்தப்பாம்பு இருக்கும் என்று தெரியாது? கவனம்.’ என்றார் தவமண்ணன்.
‘ சரி அண்ணன். இருட்டுப்படுது… நானும் இறங்கிறன். உங்கட இடத்தில் எனக்கு ஏதும் வேலை இருந்தால் சொல்லுங்கோ… அப்ப நான் வாரன் அண்ணன்’ சீலன் தவமண்ணன் கைபற்றி குலுக்கிவிட்டு அங்கிருந்து விடைபெற்றான்.
அன்று பேராசிரியர் குமாரவேலை சந்தித்தபொழுது ஒரு உலகத்தையும் பின்னர் தவமண்ணரை சந்தித்தபொழுது வேறு ஒரு உலகத்தையும் அவர் வேலை செய்யும் இடத்தில் பணியிலிருக்கும் குணரத்தினம் ஊடாக அவுஸ்திரேலியாவிலிருக்கும் அவனது அண்ணனின் உலகத்தையும் சீலன் கற்பனை செய்து பார்த்தான்.
புகலிட நாடுகளில் எல்லாவற்றையும் எல்லா சௌகரியங்களையும் சுகங்களையும் தேடிவிட்டு மகிழ்ச்சியை தொலைத்துக்கொண்டிருப்பவர்களின் பட்டியலில் தானும் இணைந்துவிடுவேனோ என்ற பயம் சீலனை வருத்தியது.
குளிர்காற்று அவனைத்தழுவிச்சென்றது. வீதிகளில் மின்விளக்குகள் பிரகாசத்தை சிந்திக்கொண்டிருந்தன. கார்கள் மற்றும் வாகனங்கள் எதிரும் புதிருமாக ஓடிக்கொண்டிருந்தன.
என்றாவது ஒரு நாள் கார் செலுத்தப்பழகி சொந்தமாக கார் ஒன்றும் வாங்கவேண்டும். அப்பொழுது பத்மகலா அருகிலிருந்து தனது கேசங்களை வருடிவிடவேண்டும். மெக்டொனால்ட்ஸ் ட்றைவிங்துருவில் காரிலிருந்து இறங்காமலேயே அவளுக்கு உருளைக்கிழங்கு சிப்ஸூம் பேகரும் ஐஸ்கிறீமும் வாங்கிக்கொடுக்கவேண்டும். அவள் அவற்றை சுவைத்து தனக்கும் ஊட்ட வேண்டும். ஒரு ஐஸ்கிறீமை மாறி மாறி இருவரும் சுவைக்கவேண்டும்.
சீலன் கற்பனைச்சிறகை கட்டிக்கொண்டு பறந்தான். அதனால் ஒரு பஸ்தரிப்பையும் கடந்து வந்துகொண்டிருந்த பஸ்ஸையும் தவறவிட்டு சற்று தொலைவிற்கு வந்து அடுத்த பஸ்ஸிற்காக காத்து நின்றான்.
ஒரு பஸ் போனால் மற்றுமொரு பஸ். காத்திருப்பதில் சுகமும் சோகமும் இணைந்திருப்பதை அந்தக்கணம் உணர்ந்தான்.
(தொடரும் 18)
No comments:
Post a Comment