விழுதல் என்பது எழுகையே..
பகுதி- 20
எழுதியவர் பசுந்திரா சசி. –
எழுத்தாளர் பற்றிய அறிமுகத்துடன் தொடர் 20 தொடர்கிறது
இயற்பெயர் :- ப. சசிகரன்
புனைபெயர் :- பசுந்திரா சசி
நெடுந்தீவை சேர்ந்தவர் இவர் . வவு ஃசெட்டிகுளம் ம. வி இ கிளி ஃகோணாவில் அ த க பாடசாலை இ யாழ்ஃ அளவெட்டி அருணோதயக்கல்லூரி மற்றும் யாழ் ஃ வண்ணை வைதீஸ்வரகல்லூரி ஆகியவற்றில் பயின்றவர் . தற்போது பிரித்தானிய நாட்டில் வசிக்கிறார் .
கடந்த ஆண்டு “கட்டடக்காடு ” என்னும் சமூக நாவலுடன் இலக்கிய துறையில் பிரவேசித்த இவர் வீரகேசரியில் “மடு ” என்னும் தொடர்கதையை எழுதி வருகிறார் . இவரது 15 க்கு மேற்பட்ட சிறுகதைகள் தாயாகத்திலும் புலத்திலும் பிரசுரமாகியுள்ளது .
- வாசிப்பு வேண்டும் ; என்னும் அதே வேளை “நயம்பட உரை “என்னும் ஒளவையின் கூற்குக்கமைவாக ‘வாசிக்கும்படியாக எழுத படவும் வேண்டும்’ என ‘ – மானிடநேயத்தை வலியுறுத்தி எழுதிக்கொண்டிருக்கும் ஒரு பரதேச வாசி – என்று தன்னை விழிக்கிறார் – பசுந்திரா சசி –
பகுதி 20 கதை தொடர்கிறது.
டேவிட் சீலனுக்குமக்டொனல்ஸ்ஸில் வேலை எடுத்து தருவதாகச் சொன்னது அவனுக்கு மன ஆறுதலைக் கொடுத்தது.
தான் வேலலைக்குப் போகப்போகிற மக்டொனால்ஸ் இருக்கும் இடத்தை டேவிட் மூலம் அறிந்து கொண்ட சீலன் அந்த இடத்திற்குப் பொழுது போவதற்கு போவதென முடிவெடுத்து அங்கு போனான்.
மக்டொனால்ஸ் அமைந்திருந்த இடம் அவனுக்கு பிடித்திருந்தது. விரைவுப்பாதைக்குப் போகும் கிளைப் பாதையில் அந்த மக்டொனால்ஸ் அமைந்திருந்தது.
அழகாக கட்டப்பட்டிருந்து அந்த உணவகத்தைச் சுற்றி கண்ணாடியாலான வேலியும் உள்ளே பூச்சாடிகளில் பூச்செடிகள் வைக்கப்பட்டிருந்தன.
விற்பனைப் பகுதிக்குச் சென்ற சீலன் ஓரு கோப்பியை வாங்கிக் கொண்டு வந்து நாற்காலியில் அமர்ந்து மெதுவாக கோப்பியை குடித்தவாறு கண்ணாடி வேலிக்கூடாக விரைவுப் பாதைக்கு போகும் கார்களை பார்த்துக் கொண்டேயிருந்தான்
அப்பொழுது அவனைக் கடந்து ஒரு தமிழர் தோளில் ஒரு பையைப் போட்டவாறு விற்பனைப் பகுதியை நோக்கிப் போகும் போதே அங்கு வேலை செய்து கொண்டிருந்த பெண் “கலோ மகேந்தி விடுமுறை முடிந்துவிட்டதா” என ஜேர்மன் மொழியில் கேட்டதை சீலன் புரிந்து கொள்கிறான்
மகேந்தி என்ற அவர் மக்டொனால்ஸ்ஸில் வேலை செய்பவர் என்பதும் அவர் விடுமுறை முடித்து மீண்டும் இன்று வேலைக்கு வருகிறார் என்பதை சீலன் விளங்கிக் கொள்கிறான்
மக்டொனால்சிக்குள் போன மகேந்தி வேலைக்கான உடையைப் போட்டுக் கொண்டு கையில் ஒரு கோப்பிக் கோபபையுடன் வெளியே வந்ததும் கோப்பி குடித்துக் கொண்டு சீலன் இருப்பதைக் கண்டதும் அவனை நோக்கி வந்து அவன் முன்னால் இருந்த நாற்காலியில் உட்காருகிறான்.
ஒருவருக்கொருவர் வணக்கம் சொன்னதன் பின்னர் மகேந்தி சீலனைப் பற்றி முதலில் விசாரிக்கிறார். சீலன் தான் சுவிஸ்சுக்கு வந்து கிட்டத்தட்ட ஆறு மாதமாகிறது எனச் சொல்ல மகேந்தி தான் வந்து ஐந்து வருடங்களாகிறது என்கிறான்.
சுவிஸ்சுக்கு எப்படி வந்தனீங்கள் என சீலனைக் கேட்க, தான் கொழும்பிலிருந்து ஆஸ்திரியா வந்து அங்கிருந்து சூரிச்சுக்கு வந்ததைச் சொல்லிவிட்டு மகேந்தியிடம் “நீங்கள் எப்படி வந்தனீங்கள்” என்று கேட்கிறான்.
தன்னுடைய பெயர் மகேந்திரன் தன்னை எல்லோரும் மகேந்தி என்றுதான் கூபபிடுவார்கள் எனச் சொன்ன மகேந்தி கைக்கடினாரத்தைப் பார்க்கிறான். வேலைக்கு இன்னும் முப்புது நிமிடங்களிருக்கவே தான் எப்படி வந்தேன் என்பதைச் சொல்லத் தொடங்குகிறான்.
மகேந்தி நகைச்சுவை உணர்வு உள்ளவன் என்பதை அவன் தனது அகதிப் பயணத்தைச் சொல்லத் தொடங்கும் போதே சீலன் புரிந்து கொள்கிறான். மகேந்தி கொழும்பிலிருந்து தாய் லாந்து வந்து தாய்லாந்திலிருந்து தனது கதையைச் சொல்லத் தொடங்குகிறான்.
ஐரோப்பிய நாடொன்றுக்கு தனி ஆளாக போவதைவிட கணவன் மனைவியாக போவதே சுலபமானது என ஏஜன்சி தாய்லாந்தில் வாழும் ஒரு பெண்ணை ஒழுங்கு செய்ய அவளுடன் மகேந்தி தாய்லாந்து விமான நிலையத்தில் வந்து நிற்கிறான்.
“நீ அது… தானே ? இண்டைக்கு என்னோட வாறியா எண்டு கே;கிறாங்க. கறுமம் கறுமம் நிக்கிறது தான் நிக்கிறான் கொஞ்சம் நெருங்கி நிக்கிறானா..? தெருப்பொறுக்கியள் வலிய வந்து இப்பிடி எல்லாம் பேச விட்டிட்டு கண்டும் காணாம நிக்கிறான். கட்டிய கணவனையே அருகில் கட்டினவன் மாதிரி ஒட்டி நில்லுங்கோ எண்டு கேக்க வேண்டிய நிலை எனக்கு. இது என்ன மனுசப்பிறப்பா இல்லை வேற ஏதுமா ? ” என குறும்போடு குறுகுறுத்தாள் மகேந்திரனின் மனைவி கனிதா. அவளின் முணு முணுப்பு உதடுகளுக்கு வெளியே உறுண்டு சென்று மகேந்திரனின் காதுகளிலும் விழுந்தது .
மகேந்திரன் இவ்வளவும் கேட்டும் சும்மா இருப்பானா “கலோ நீர் ஒன்றும் தாலி கட்டின பொண்டாட்டி இல்லை தப்பான முறையில் ஒட்டிக்கொண்டவள் அதையே சாட்டாக வைத்து – பிளாக் மெயில்பண்ணி சொந்த புருசனாக மாற்ற கனவு காணாதையும் என்னை விட உமக்கு ஐந்து வயது அதிகம் என்பதையும் உங்கிட்ட அப்பா கட்டாயப்படுத்தினதால தான் இந்த விளiயாட்டுக்கே நான் சம்மதிச்சனான் எண்டதையும் மறந்து போடாதையும்” என்றான் மலை விழுங்கி போல விறைத்தபடி மண் விழுங்கிய குழந்தை போல மூக்கை சுழித்து அருவருத்தபடி மநே;திரன்.
“எல்லாம் என் தலை எழுத்து என்பதாய் சுடிதாரை சீர் செய்து கொண்டு நெற்றியில் வளிந்த குறுமுடியை ஒதுக்கினாள் கனிதா .
இருந்தாலும் சற்று முன் நடந்தவற்றை நினைக்க மகேந்திரனால் சிரிப்பை அடக்க முடியவில்லை.
“பொடாய்… பொடாய் ….“ என்று கனிதா தாய்லாந்து பாசையில் நாயை எதிர்க்கும் ப+னை போல ஒரு தாய்லாந்து காரனை பார்த்து சீறி வார்த்தைகளை விட்டெறிந்ததை தான் ஏதுமறியாது அருகில் அணிலேற விட்ட நாய் போல மேலேறும் விமானங்களை பார்த்து ஏங்கி நின்றதும். அவள் கடுப்பு தாங்க முடியாமல் “மகேந்திரன் அவங்க என்ன கேக்கிறாங்க எண்டு தெரியுமா..? என கேட்க. அவன் “அவங்க தாய்லாந்து பாசையிலயா பேசினாங்க ? “ என பதில் சொல்ல பேசின மொழி என்ன என்றே தெரியாதவனுக்கு என்ன பேசினாங்க என்றா தெரியப்போகிறது, என அவள் முணுமுணுத்ததை எல்லாம் மீட்டிப்பார்த்து சிரித்தான். இதனால் மகேந்திரன் ஒன்றும் சேமணப்பயல் இல்லை. கூர்ந்த சிந்தனையாளன்.
தாய்லாந்தில் யாரோ ஒருத்தியை மனைவியாக நடிக்க வைத்த காலத்தை எண்ணியபடியே கலங்கி நின்றான் மகேந்திரன்.
மாமா சாதி குறைஞ்ச இடத்தில கலியாணம் செய்தது எண்டு தமையனின் செத்த வீட்டுக்கும் பக்கத்தில இருந்தும் போகாத மனிசி இந்த அம்மா மனிசி. கேட்டால் “ அந்த காலத்தில யாழ்ப்பாணத்தில இருந்து வன்னிக்கு குடி தண்ணியோட விதான வேலைக்கு போய் வந்த கந்தவனத்தாரின் அடித்தோன்றலாம் தான் ”; எண்டு அடிக்கடி சொல்லும் அம்மாவை சாந்தப்படுத்தி இவை எல்லாவற்றையும் சாத்தியப்படுத்த வேண்டும். அம்மாவும் பாவம் என்னை பெற்றதை தவிர இந்த பிறப்பில எந்த சுகத்தையும் கண்டதில்லை மனிசியின்ர கழுத்தில காதில கிடந்ததையும் வித்துப்போட்டு வந்து அரை வழியில ஆற்றையோ கால்ல விழுந்துகொண்டு நிக்கிறன் நான். தங்கச்சிக்கு வேற வயதாகுது இந்த ஏஜென்சிகள் ஏத்திறன் ஏத்திறன் எண்டு நாளைத்தான் ஏத்திறாங்கள் ஆளை ஏத்தக்காணம், எனச் சினந்தான்.
திரைகடல் ஓடி திரவியம் தேடு என்பார்கள் நாமோ திரவியம் கொடுத்து திரைகடல் ஓடிக்கொண்டு இருக்கிறோம். எல்லாவற்றுக்கும் அந்த ஒன்றேதான் காரணம்.
கனிதா முனிதான் என்பது போல அவனையே முறைத்துக்கொண்டு அருகில் நின்றாள். அவளுக்கு இந்த எயர்போட்டால இவனை பிடிபடாம கொண்டு போய் சேர்க்க வேண்டும் என்ற படபடப்பு. இப்படி ஒரு இக்கட்டான நிலைக்கு ஆளானதில் அவளுக்கும் விருப்பம் இருக்காது தான்.
அவ்வளவுக்கு அவள் ஒன்றும் பணமோ அழகோ அறிவோ இல்லாதவள் இல்லை .
அவளின் தாய் தாய்லாந்து பெண்மணி . தந்தைதான் தாய்லாந்தக்கு பிழகை;க வந்த இந்தியத்தமிழர். இப்படி பஞ்சத்திற்கும் தாய்லாந்து வர்ணத்திற்கும் பிறந்த பஞ்சவர்ண கிளி அவள். பார்ப்பதற்கு மொட்டு விரியாத காளான் போல வெள்ளையும் மென்மையுமாய் இருப்பாள். தலை முடி மட்டும் சோளன் பொத்தி தும்பு போல செம்பட்டை நிறத்தில் ஏதோ அடித்து வைத்திருந்தாள்.
பாவம் எங்கும் போக முடியாமல் இடைவழியில் முழித்துக்கொண்டு திரும்பி ஊருக்கு போனாலும் உயிர்பயம் என்று இருந்த மகேந்திரனுக்கு உதவி செய்ய, ஓம் என்று வாக்கு கொடுத்து பணமும் வேண்டி விட்ட அப்பாவின் சொல்லுக்கு கட்டுப்பட்டு, மனைவி வேசம் போட்டு ஐரோப்பா கொண்டு போய் விட ஒப்புக்கொண்டதன் விளைவே இன்று கட்டிய மனைவியாய் இல்லாமல் கடவுச்சீட்டில் படம் ஒட்டியதால் மனைவியாக வர வேண்டி வந்து கண்றாவியாக நிக்கிறாள்.
முன் பின் செத்திருந்தா தானே சுடலை தெரியும் என்பது போல இவன் முன் பின் கட்டி இருந்;தால் தானே கணவன் மாதிரி நடக்கத்தெரியும் என கதை விட முடியாது கட்டினது கட்டாதமாதிரியும் கட்டாதது கட்டினா என்ன செய்ய வேணும் என்றும் பயிற்சி எடுக்கிற காலமிது. கனிதாவும் கட்டாதவள் தான் ஆனால் நாகரீக உலகில் வாழ்வதால் ஏதோ கொஞ்சம் தொரிந்து வைத்திருக்கிறாள்.
“மகேந்திரன் நெருங்கி என்னோட கிட்ட நில்லும் பாப்பம்” என்றாள் மண்டக் கட்டெறும்பின் கொடுக்கு போல கண்ணை அகல விரித்தபடி . அவன் “ டீசண்டான கணவன் மனைவிகளும் பயணம் போவ துண்டு” என்றான்.
முட்டினால் தான் முடிச்சது இல்லை என்றால் முடிச்சவித்தது என்று அர்த்தம் இல்லை என்ற தொனியில். கனிதாவின் கோவம்; கண்ணில் மின்னி உதட்டில் வெடித்தது. “ இங்கு யாரும் யாருக்கும் உறவு முறை நிரூபிக்க வேண்டியதில்லை உண்மையான உறவு முறையாய் இருந்தால் இப்படி கள்ளமாக கடவுச்சீட்டில மட்டும் உறவு வைத்துக் கொண்டு இருப்பவர்கள். ஊழியர்களை நம்ப வைக்க அதை இதை செய்து தான் ஆக வேண்டும். அப்பா சொல்லும் போது மட்டும் ஓம் ஓம் எண்டு ஓணான் மாதிரி தலையை ஆட்டினீர் இங்க வந்து குதர்க்கம் பேசுறீர். வெளிநாடு போக வேணும் எண்டால் நான் சொல்லுறபடி என்னோட ஒட்டிக்கொண்டு வாரும். இல்ல நான் தாய்லாந்து ஜெயில்ல இரும்பு சங்கிலி கிலோ கணக்கில தூக்கத்தான் போறன் எண்டு ஆசைப்பட்டா அதுக்குப்பிறகு உம்மிட விருப்பம். செய்யிறது எல்லாம் பிழையான வேலை அதுக்குள்ள கதை மட்டும் வெள்ள வேட்டிக்காறன் மாதிரி என்று” எரி வெள்ளியாய் எரிந்து தள்ளி விட்டு முடிவில் சிறு புன்னகையும் உதிர்த்தாள். கனிதா. கனி என்ற பேரோட கச்சல் காயாய் இருக்கிறாள் என்று எண்ணியபடி சற்று நெருக்கமாகவே நின்றான் மகேந்திரன்.
என்ன நினைத்தாளோ தெரியாது திடீரென வெடி அரசன் போல திமிர்ந்து வேண்டா வெறுப்பாக விலகி நின்றாள். மகேந்திரன் புரியாமல் விழித்தான்.
மகேந்தி தனது அனுபவத்தைச் சொல்லச் சொல்ல சீலன் ஆர்வமாக கேட்டுக் கொண்டிருந்தான். மகேந்தி தனது அகதிப் பயணத்தை நகைச்சுவையுடன் விபரித்த போது சீலன் பலமுறை வாய்விட்டுச் சிரித்தான்.
மகேந்தி தொடர்ந்து சொல்லிக் கொண்டே இருந்தான்.
அவனின் முழியே எல்லாவற்றையும் காட்டி கொடுத்து விடும் போல இருந்தது. “மகேந்தி கோம்ப திருடினவன் மாதிரி முழிக்காம சுவிங்கத்தை எடுத்து வாயில போடும் நாலாவது கவுண்டரில ஒரு நாதாரி என்னையே பாத்துக்கொண்டு இருக்கு நானும் அதை கண்டு கொண்டதாக காட்டிக்கொடுத்திட்டன். அவர் என்னை பார்த்து நெளியிறத பார்த்தா எங்கட பருப்பை அவருட்ட அவிக்கலாம் போல கிடக்கு பார்ட்டி கொஞ்சம் பசலை (பொண்ணு ) வியாதிக்காறன் போல தெரியிறான். அனேகமா தன்னிட்ட தான் நான் வருவன் எண்டு நினைக்கிறான். பாஸ் போட்டை என்னிட்ட தா நான் உன்னை ஒதுக்கிற மாதிரி நடிப்பன்” . என்று மகேந்தியின் காதில் தரையை பார்த்து தாவணியை ஒதுக்கியபடி ஓதினாள்.
அவர்களின் முன்னும் பின்னும் உண்மையான கணவன் மனைவி மற்றும் உல்லாச பயண காரர்கள் வரிசையில் நின்றார்கள். தாய்லாந்து விமான நிலையம் மாதுளம்பழச் சுளை போல அழகாகவும் ஈரமாகவும் இருந்தது. ஆனால் மகேந்திக்க வேர்த்து கொட்டாத குறைதான். இது எதையும் ரசிக்கும் மனநிலையில் அவன் இல்லை. இதற்காக இன்னமொரு முறைதான் வந்து போக வேண்டும் என்று எண்ணிக்கொண்டான்.
ஏதோ மூக்கை பொத்திக்கொண்டு பேசுவது போல ஒரு பெண் ஒலிபெருக்கியில் பேசினாள். கனிதா நெஞ்சில் கையை வைத்து பெருமூச்சு விட்டபடி தலையை முகட்டை நோக்கி உயர்த்தினாள். மகேந்திக்கும் ஏதோ அசம்பாவிதம் நடந்து விட்டது என்று மட்டும் தோன்றியது. ஆனால் என்ன என்று புரியவில்லை .
அவள் நெற்றியில் கையை வைத்தபடியே படியே “ எங்கிட விமானம் வேற இடத்தில நிக்குதாம் ஏதோ இயந்திர கோளாறாம் குறித்த நேரத்திற்கு வெளிக்கிடாதாம் எண்டு சொல்லுறாங்கள். சரியான நேரத்திற்கு போகாட்டி மொஸ்கோவில இருந்து உக்கிரையின் போற ஏற்பாடுகள் எல்லாம் பிழசை;சுப்போகும் . இப்ப என்ன செய்யிறது எண்டு தெரியேல்ல இரு வாறன் அப்பாவுக்கு போன்பண்ணி கேப்பம் என்று அவ்விடத்தை விட்டுப் போனாள். சற்று நேரத்திலேயே திரும்பி வந்தாள். முகத்தில் சலிப்பு தெரிந்தது.
“அப்பா திரும்பி வரட்டாம் பிறகு யோசிப்பம் எண்டு சொல்லுறார் ரிக்கற் காசும் திரும்பி எடுக்க முடியாது அவ்வளவுதான் “என்றாள். எப்படியாவது போய் சேர வேண்டும் என்று மகேந்தியும் இப்படி இப்படியான பாதையில் இப்படி இப்படியான வேளையில்தான் போக வேண்டும் என்பதாய் அவன் முகவர்களும் செயற்பட்டார்கள். இதனால் அவன் அவர்கள் சொல்லும் மகுடிக்கு ஆடவேண்டியவனாய் கனிதா பின்னால் குனிந்தபடி நடந்தான்.
“இனி தாய்லாந்தில் இருக்க முடியாது விசா முடிந்து விட்டது அருகில் இருக்கும் கம்போடியாவுக்கோ வியட்னாமுக்கோ போய் விட்டு மீண்டும் வரலாம் அல்லது அங்கிருந்து முயற்சிக்கலாம் “.என அப்பா சொன்னதாக கனிதா மகேந்திக்கு சொன்னாள்.
அங்கு இருந்த மேலும் சில பயணிகளையும் மகேந்தியையும் அன்று இரவே பெரு நதி ஒன்றை கடந்து வேறு ஒரு நாட்டிற்குள் கொண்டு வந்து சேர்த்;தார்கள். அது எந்த நாடு என்று தெரியவில்லை தெரிந்தும் செய்வதற்கு ஒன்றும் இல்லை . பயணம் முடியும் இடத்தில் படுத்தெழும்ப வேண்டியதை தவிர வேறு எதுவும் அவர்கள் கையில் இல்லை .ஆங்காங்கே பல இலங்கையர்கள் பல முகவர்களால் ஓட்டம் தடைப்பட்டு விட்ட காரணத்தால் தொழுவத்தில் கட்டிய குதிரைகள் போல கட்டி வைத்து சாப்பாடு போட்டுக்கொண்டு இருந்தார்கள். கலியாணத்திற்கு வந்த சிலர் இடையில் தாலிகட்டிக்கொண்டார்கள். கட்டிய தாலியையும் சிலர் கழற்றினார்கள். இது பாதாள உலகம் பாவ புண்ணியம் எல்லாம் அகலம் என்பது போல அநாகரிகம் நடந்தேறியது.
ப+மியில் இருக்கிறோம் என்று மட்டும் தெரியும் எந்த நாடு என்று தெரியாமலே இரண்டு நாட்கள் கழிந்தன. கூட்டிக்கொண்டு வந்தவர்கள் மூச்சு பேச்சு காட்டாமல் இருங்கோ வெளிய திரிய வேண்டாம் எல்லா சாமான்களும் இருக்கு சமைத்து சாப்பிடுங்கோ என கூறிவிட்டு போய்விட்டார்கள். பார்ப்பதற்கு இந்த நாட்டு மக்களும் தாய்லாந்தக்காரரின் தங்கையின் பிள்ளைகள் போலவே இருந்தார்கள். ஆண் பெண் இருவரும் இரு வேறு முறையிலேயே வணக்கம் சொன்னார்கள். அதாவது தாய்லாந்து கலாச்சாரத்தில் ஆண்கள் “சபாடிகாப்” என்றும் பெண்கள் “ச..பா..டி..கா…….” என்று அரை மைலுக்கு இழுத்தும் வணக்கம் சொல்வார்கள். இது வியட்னாம் இல்லை என்று மட்டும் தெரிந்தது. தாய் எழுத்து போலவே எழுத்து இருந்தது. வியட்னாம் எழுத்து ஆங்கில வடிவ எழுத்து என யாரோ எப்போதோ சொன்னது நினைவில் வந்தது . மூன்றாவது நாள்தான் பிரஞ்சு கொலனியாக இருந்த லாவோஸ் என்னும் புகையிரதம் இல்லாத ஆனால் இலங்கையை விட மூன்று மடங்கு பெரிய நாடு என தெரிய வந்தது. தலைநகரம் வியன்ரியன். இங்குதான் தாங்கள் இருக்கிறார்கள் என்றும் கண்டு கொண்டார்கள். குட்டி நாடுகாண் பணயம் முடிவுக்கு வந்தது.
பிலாக்கொட்டை குருவியை தவிர எல்லா எல்லாவற்றையும் சாப்பிட்டு ஏப்பம் விட்டும் பசி தாளாத நாடு. பாம்புப் பயம் இல்லை தின்றே அழித்து விட்டார்கள். இப்போது நாய்க்கறிக்கு நல்ல மவுசு . ய}னை மட்டுமே புண்ணியம் செய்த பிறவி அதுவும் எத்தனை நாளுக்க என்பது சந்தேகமே.
அரிசியை நீத்துப்பெட்டியில் வைத்து அவிச்சு அதை கவிச்சு என்று அழைத்து மூங்கில் குருத்து அவிச்ச தண்ணீரில் நனைச்சு நனைச்சு சாப்பிட்டார்கள். மழை இல்லாத காஞ்ச பிரதேசத்தில் தான் பஞ்சம் வரும் என்று நினைத்தவனுக்கு இங்கே வந்ததும் தான் வறுமைக்கு காரணம் அறிவைப் பயன்படுத்தாத நிலைதான் என்று புரிந்தது.
சிலு சிலு என ஆண்டு முழுக்க மழை. சுடு வெய்யிலோ சுவிஸ் குளிரோ இல்லாத இடைநிலை வெப்பம் இதனாலேயே அவர்கள் தேசிப்பழம் போல மஞ்சள் நிறத்தில் தகதக என்று இருந்தார்கள் . ஆனாலும் என்ன முயற்சி இல்லாமையால் வறுமை. பாடு படுபவர்க்கே இந்த பாரிடம் சொந்தமையா என்ற பாட்டுதான் நினைவில் வந்தது.
இன்னுமோர் சுவாரசியம் இயற்கை பிறப்பு சம நிலையில் சிறு கோளாறு பெண்கள் பெற்ற பிள்ளைகள் பெரும்பாலும் பெண்களாகவே இருந்தார்கள். இதனால் ஆண்களுக்கு அல்ல பெண்களுக்கே அதிக மவுசு மஜோறிட்டி யாரோ அவர்கள் தான் எல்லாம் என்பதற்கு இன்னுமோர் உதாரணம். பெண்களே அதிக தொழில் துறையில் அதிதியாக இருந்தார்கள். பொருளாதாரம் அவர்களாலேயே வளர்ந்து வந்ததால் ஆண்களிலும் பெண்களே அதிகம் விரும்பப்பட்டார்கள்.
ஒரு ஆண் ஒன்றேகால் பெண்ணக்கு இணையாக இருந்தமையால் ( இது கணித கணக்கு எனக்கு தெரிந்தது தமிழ் கதைதான்) அவனில் நம்பிக்கை குன்றி விட்டிருந்தது கட்டாக் காலியாக உணரப்பட்டான். இதனால் அவன் பொறுப்பின்றிய சோம்போறியாகினான்.
முயற்சி குன்ற முடிவு பஞ்சம் என்றாகியது. விசித்திரமான அனுபவம் ஆனால் பயங்கரமான அனுபவங்களை கடந்து வந்தமையால் மகேந்திக்கு இது எருமை மாட்டில் பெய்த மழை போல இருந்தது. இங்கு எத்தனை நாட்களோ என மனம் விட்டுப்போனது. மூத்த பத்திரிகையாளர் கோமல் “திரும்பிவராட்டி கூட பறவாய் இல்லை என்று நினைச்சா எங்கேயும் பயமின்றி போகலாம்” என்று சொன்னது போல .
சொந்த நாட்டுக்கு போகாம எங்க போனாலும் பரவாய் இல்லை என்று தோன்றியதால் பொறுமையாக இருந்தான். ஆனாலும் யார் கண்டார் எந்த பாதையும் இறுதியில் சொந்த நாட்டிலும் போய் முடிவடையலாம் என்று நினைக்கும் போதுதான் வேதனை நெஞ்சை வாட்டியது.
வலியே மனிதன் எவ்வளவு தனிமையானவன் என உணர்த்தியது தாயின் நிணலை பிரிந்த இந்த நாட்களில் பழுத்து விழுந்த இலை போல பச்சையமான பாச வார்த்தைகளுக்கு ஏங்கினான்.
பசிக்கும் போதும், பார்க்காமல் நிமிர்ந்து தலையில் இடிக்கும் போதும் ஏன் நித்திரை இன்றி முழிக்கும் போதும் தாய் நினைவு வந்து வாட்டியது. அன்னையின் சுற்று வட்டம் போல் அழகான சுகம் எங்கும் இல்லை என்பதை முதல் முதலாய் உணர்ந்தான்.
எது எங்கே இருக்கிறது என்று தெரியாமல் இருட்டில் தேடி திரிவது போல மனம் சலித்தது. சமாதானமாக வாழ உகந்த புத்த மத நாடான லாவோசில் இருந்து மீண்டும் பயணம் என்று கூறப்பட்டது ஆனால் எங்கு எப்போது என்று மட்டும் தெரியாது. பயணம் என்றதும் பயமும் வந்து ஒட்டிக்கொண்டது விமானம் மட்டுமல்ல விமான நிலையமும் அந்தரத்தில் பறப்பது போல உணர்ந்தான்.
வீடு வரா விட்டாலும் அதற்குள் இருந்து வெளியே வந்தால் போதும் என இருந்தது. அழகாக ஆனந்தமாக இருக்க வேண்டிய பறப்பு அனுபவம் முச்சந்தியில் முனிக்கு கழித்த இனிப்பு பணியாரம் போல கிட்ட போகவே பயமாக இருந்தது. என்ன ஆச்சரியம் மீண்டும் அதே கனிதாவோடு கணவன் வேசம் போட்டு கழுத்தில் மாலை போடாத குறையாய் அறுக்கக்கொண்டு போன ஆடு போல தாய்லாந்து விமான நிலையத்தினுள் தள்ளி விட்டார்கள்.
அவனது படத்தை அவனாலே நம்ப முடியவில்லை கோட்டு சேட்டு ரை சப்பாத்து எண்டு காவல் கொட்டில் வெருளியின் நினைவு தான ஞாபகம்; வந்தது. இதை இங்குள்ளவர்கள் வேற நம்ப வேண்டும் என்று தேசிக்காய் குத்தின வேம்படி வைரவர் வரை ப+சைகள் வேற செய்து முடிக்கப்பட்டு இருந்தது.
இவனின் எள்ளலை கண்ட ஏஜென்சி அடிக்கடி “தம்பிக்கு கஸ்டம் தெரியேல்ல” என்று கடிந்து கொண்டு இருந்தார். கனிதா இம்முறை முன்பை விட ஆடைக்குறைப்பு செய்திருந்தாள். எல்லாம் இராஜ தந்திரம் நல்ல பொண்ணுதான் நாதாரித்தனமான மூளை. போடிங் காட் பார்த்து விடுகிற நேரம் வந்தது. ஏற்கனவே பணம் உள்ளே பாய்ந்து விட்டது என அலுவலர் சுடுதண்ணி குடிச்ச நாய் மாதிரி அங்கும் இங்கும் ஓடி திரியும் போதே தெரிந்தது. அப்பிரிவில் வேலை செய்த பதினாறு பேருக்கும் பணம் பட்டுவாடா செய்திருந்ததால் குந்தி இருந்து குடும்பம் நடத்தினாலும் யாரும் கண்டு கொள்ள மாட்டார்கள் எனத் தோன்றியது.
“இம்முறை எல்லாம் இறங்கும்” என்று ஏஜென்சியும் சொல்லி விட்டார். அவரை முக்காவாசிப்பேர் அரைவாசிக்கடவுளாக நம்பினார்கள். தோட்டக்காரனோட தோடங்கா ஆய வந்த கள்ளனுக்கு என்ன பயம். பணியாளரை மட்டுமா விலை கொடுத்து வாங்கினார். பாதி கடவுள் பயணிகளையும் விலை கொடுத்து வாங்கி விட்டாரோ என்பது போல பதினேழு கறுத்த தலை சோடிகளுடனும் தனியே தலையை சொறிந்தபடியும் ரிய+ப் லைற் வெளிச்சத்திற்கு வந்த ப+ச்சி மாதிரி எங்கிருந்து வந்தார்கள் என்று தெரியாமல் வந்து கூடி விட்டார்கள். சும்மா சொல்லக்கூடாது பார்க்க பெருமையாய் தான் இருக்கு ஆனால் பாவி ஏஜென்சி பேராசையில கன பேரை ஒண்டா போட்டு எல்லாத்தையும் கெடுக்க போறானே என சுயநலமாக மனம் பதைத்தது.
தொடரும் 21
No comments:
Post a Comment