எழுதியவர் பசுந்திரா சசி.
சும்மா பார்க்கவே எல்லோரும் களவுக்கு போய் கண்முளிச்ச ஆக்கள் போல தினுசு தினுசா தங்களுக்கும் பயணத்திற்கும் தொடர்பு இல்லாதது போல பாவனை செய்து கொண்டு நிற்;பதே இவர்கள் எல்லோரும் ஒரு பட்டி என்று காட்டிக்கொடுத்தது. . பொறுப்பதிகாரி பரம ரகசிய அசைவுகளை சைகை மூலம் பதிவு
செய்ய அதை வார்த்தைகளாய் கனிதா படித்தாள். கனிதா மட்டுமே தான் சைகை உணர் கொம்பு அன்ரனா அங்கே அவள் அதை உள்வாங்கி எதிர்வினை ஆற்றினாள். என்ன ஆச்சரியம். அட வைச்ச முட்டை எல்லாம் பொரிச்சுட்டது போல பதினேழு பேரும் விமானத்தில் ஏறி விட்டார்கள். இப்போது குஞ்சு எல்லாம் ஆகாயத்தில, கோழி மிதிச்சு குஞ்சு சாகாம இருந்தா போதும் என்று இருந்தது. ஆனாலும் விமானத்தில் இருந்தால் மேல் லோகம் கிட்ட என்பது அப்போது எவருக்கும் தெரிந்திருக்க வில்லை . திட்டமிடட்ட படி எந்த அசம்பாவிதமும் இன்றி விமானம் உக்கிரையின் வந்து சேர்ந்து விட்டது. “அப்பிள் பழமும் அவிச்ச இறச்சி உருண்டையும் காலை உணவாக தங்கி இருந்த விடுதியில் பரிமாறினார்கள். அந்த ஊர் போலவே உணவும் விசித்திரமாக இருந்தது. போகும் பக்கத்தால் வருவதும் திறக்கும் பக்கத்தால் மூடுவதும் என எல்லாம் தலை கீழாக நடைமுறையில் இருந்தது. எல்லாம் பழக்கம் தான் காரணம் என்றும் மனிதனால் உருவாக்கப்பட்டதே எல்லாம் என்றும் எண்ண எண்ண கடவுளும் கரைய முற்பட்டார். சம உடைமைப் பொருளாதாரம் கொண்ட றஸ்ய நாட்டின் சாயல் எல்லாவற்றிலும் தெரிந்தது. ஏனோ மகேந்தி வர வர குறுகி கறுத்துக்கொண்டு வந்தான். ஊரில் இவன் நல்ல சிவலை இங்கும் அவன் அவ்வாறுதான் இருந்தான் ஆனால் இங்குள்ளவர்கள் இவனை விட வெள்ளையாகி இவனை கறுப்பனாக்கி விட்டார்கள். உயரமும் அவ்வாறுதான். அழகான பெண்களே கண்ணில் தட்டுப்பட்டு போனார்கள். குளிர் பார்க்க அழகாகவும் பட்டால் ஊசிபோல குத்துவதாகவும் இருந்தது. ஆனால் இவர்கள் தான் நாகரீக கோமாளிகள் போன்ற விமான பயணிகள் ஆச்சே குளிராவது குத்திறதாவது. இரண்டு நாள் கழித்து விடுதிக்கு ஒருவர் வந்து உயிரை உறைய வைக்கும் செய்தியை சொல்லிவிட்டுப் போனார். “இனி நடை தான், போடர் கடக்க வேண்டும”; என்றார். அட இவ்வளவு லச்சத்தை கொடுத்து நடந்தா போக வேண்டும் இதை எல்லாம் அம்மாவிடம் சொல்லி பேச்சு வேண்டி கொடுக்க ஏலாது. அழுது சாதித்த காலம் எல்லாம் அம்மா மடியுடன் போய் விட்டது. நடப்பதற்கான நாள் வந்தது. சந்திர மண்டலத்திற்கு போகிறவர்கள் போல எல்லோருக்கும் கனமான உடுப்புகள் கொடுக்கப்பட்டது. குளிருக்கு விறைக்காதாம். உண்மைதான் வேர்த்துக் கொட்டியது. கம்பு குச்சி பாவைபிள்ளைக்கு கடுதாசி சட்டை போட்டது மாதிரி கூட வந்த சில பெண் புரசுகளுக்கும் உடை போட்டு முடி வெட்டப்பட்டது. ஒரு பெண் கல்யாணப் பெண். புருசனிடம் போன சீதையே இப்படி கஸ்டப்பட்டு இராமனை அடைந்திருக்க மாட்டாள். அவ்வளவு கடினமான பயணம். இவை தெரிந்திருந்தும் மனைவியை துன்புறுத்துவதும் துரோகம் செய்வதும் ஆங்காங்கே நடக்கத்தான் செய்கிறது. விழுதல் என்பது எழுகையே என்பதற்கிணங்க எல்லோரும் தயாராகினார்கள். கனிதா இனிதே விடை பெற்றுப் போனாள் . ஆனால் மகேந்தி உட்பட பலர் நினைவில் நிலவாய் நின்றாள். நடை பயணம் இரவு ஆரம்பமாகியது. பதினேழு பேரில் ஒன்பது பேர் வேறு எற்பாடு செய்து இருப்பதாக கூறி விடுதியிலேயே தங்கி விட்டார்கள். மீதி எட்டுப் பேரில் இருவர் பாக்கிஸ்தானியர்கள். இரு பெண்கள் மகேந்தி மற்றும் சிலோவாக்கியாவில் பல காலம் பயணத்திற்காக காத்திருந்த ரூபன், புருசோத் மற்றும் ஆனந்தன் ஆகிய இளைஞர்களுடன் ஒரு வழிகாட்டி கூட வந்தார்.வரும் போது இந்த பயண விபரம் தெரிந்த சிலோவாக்கியாவில் இருந்து உதவிக்காக வந்த வயதான வெள்ளைக்கார ஐயா ஒருவர் “ கடுமையான பனி கவனமாப் போங்கோ “ என்று எச்சரிக்கை செய்து அனுப்பினார். கடுமையான இரவாகையால் கண்கள் வெளிச்சத்தையே அதிகம் தேடியது குளிரை மறந்து விட்டிருந்தது. உடுப்பு வேற கூட்டுப்புழு போல இருந்ததால் குளிர் தெரியவில்லை. பாதைகள் ஒன்றும் அங்கே இல்லை இவர்கள் போவதே பாதையாகியது. சர்வாதிகாரி கிட்லர் சொன்னதுதான் ஞாபகம் வந்தது. “பாதை இல்லை என்று நிற்;காதே நீ நடந்தால் அதுவே பாதையாகும்” எப்படி அவரின் பாதை அழிவுக்கு இட்டுச் சென்றதோ அவ்வாறே இங்கும் ஆபத்து இருக்குமோ என ஏக்கம் தொற்றிக்கொண்டது. நடடா ராசா நட என்று நடந்து ஒரு ஆற்றினை அண்டிய பகுதியை வந்து சேர்ந்தோம். குளிர் குடிச்சுட்டு வந்த அப்பாவை கூட்டிவந்த அங்கிள் போல உரிமையோடு சுவாசம் வளியே உட்சென்று கொண்டு இருந்தது. அந்த வயதானவர் சொல்லி விட்டிருந்தார்.“குளிருது எண்டு ஒருபோதும் குந்தி இருக்காதேங்கோ அது தான் ஆபத்தானது. எதையாவது செய்;து கொண்டே இருக்க வேண்டும் அப்போதுதான். உடல் வெப்பமாக இருக்கும.;” என்று . வெள்ளைகாரன் இவ்வளவு வளர்ந்ததற்கு காரணமும் இந்த குளிர் போலவே பட்டது எப்போதும் எதையாவது செய்து கொண்டே இருந்தான். நாமோ நல்லா மூக்கு முட்ட இறுக்கி போட்டு குந்தி குந்தி எழும்பினதால தான் இங்கு இருந்து வந்து எங்கள் நாடுகளை பிடித்து ஆட்சி செய்திருக்கிறார்கள். பனிப்பொழிவு பலமாக இருந்தது மணலில் நடந்தது போல கால்கள் நோவெடுக்க ஆரம்பித்தது ஆண்களுக்கே இந்த நிலை என்றால் பாவம் பெண் பிள்ளைகளை சொல்லத் தேவை இல்லை. விழுந்து எழும்பி நடந்து வந்தார்கள். காதுமடல் மூக்கு துவாரங்கள் இருக்கா இல்லை இடையிலே அறுந்து விழுந்து விட்டதா என்றெண்ணும்படி விறைத்து விட்டிருந்தது. ஊரில் களைத்தால் தண்ணி விடாய்க்கும் இங்கும் களைத்தது ஆனால் தண்ணி மட்டும் விடாய்க்கவில்லை. உணவும் தேவை இன்றியே இருந்தது தேவை எல்லாம் சிறு சூரிய ஒளி வெப்பம். விரல்கள் கண் முளிக்காத எலிக்குஞ்சு போல சிவந்து சுருங்கி நடுங்கியபடி இருந்தது. விடிந்து விட்டிருந்தது ஆனாலும் வெய்யிலை காணவில்லை. குளிர் காற்று வீச ஆரம்பித்தது சற்று நேரத்தின பின் துருவிய தேங்காயத்; துருவல் போல பனி கொட்ட ஆரம்பித்தது. ஆற்றைக் கடக்க வேண்டும் ஆனால் இப்போது இல்லை மறு கரையில் வேறு ஒரு பகுதியினர் வரும் வரை ஒளித்துக் காத்திருக்க வேண்டும.; நெருப்பு மூட்டலாம் என்றால் எங்கே மூட்டுவது. சாமி ஆடும் சாத்திரியார் மாதிரி வாயிலையோ கையிலயோ தான் தீ மூட்ட வேண்டும். தரை என்று ஒன்று கண்ணுக்ககெட்டிய தூரம் வரை இல்லை. பனியே மூடி கொட்டி இருந்தது. ஒரு இரவும் ஒரு பகலும் கழிந்தது யாரையும் காண வில்லை. உணவு முடியும் தறுவாயில் இருந்தது. மல சலத்திற்காக உடைகளை வேறு கழற்றவேண்டி வந்ததால் குளிர் உட்சென்று இருந்தது. குளிப்பு முழுக்கு மட்டுமல்ல கை கழுவவும் நீரில்லை. பனிக்கட்டியில் நீர் மட்டுமல்ல குளிரும் கலந்திருந்தது கையை கை உறையில் இருந்தது எடுக்கவே கொல்லக் கொண்டு போவது போல இருந்தது. கை விரல் அசைக்க முடிந்ததே தவிர தண்ணிப்போத்தல் மூடியை தானும் திறக்க முடியவில்லை. குளிர் மெல்ல மெல்ல அனைவரினதும் உடலை சந்திரகிரகணம் போல கவ்விக்கொண்டு வந்தது. கால்கள் விறைத்து வீங்க ஆரம்பித்தது விரல்களை ஆட்ட முடியாமல் விறைத்தது. மூன்றாம் நாளும் பனியில் கிடந்ததால் அவிச்ச வத்தாளங்கிழங்கு போல உடுப்பு உரஞ்சியே உடலின் தோல் உரிய ஆரம்பித்தது. கூட்டிவந்தவர் மிகவும் இளைத்து விட்டார் அவருக்கும் உடம்பு என்று ஒன்று இருக்கல்லவா, கூட வந்த பெண் பிள்ளைகள் இனி எம்மால் தாங்க முடியாது திரும்பி போவோம் என்று அடம் பிடித்தார்கள். இதுதான் தாயம் என்று வழிகாட்டியும் பிள்ளைகளுக்கு வழி தெரியாது என்று அவரும் அவர்களுடன் திரும்பி போய் விட்டார். இறுதியில் இரு பாக்கிஸ்தானியர்களுடன் மகேந்தி ரூபன் புருசோத் அனந்தன் ஆகியோரே மிச்சம் . எவ்வளவு பணத்தை கட்டி இவ்வளவு கடினத்தின் மத்தியில் இது வரை வந்து விட்டோம் இன்னும் கொஞ்சம் பல்லை கடித்து இருந்து விட்டால் எல்லாம் சரி வந்தவிடும் என நாங்கள் திரும்பி வரவில்லை என்று நின்று விட்டோம். வழிகாட்டியாய் வந்தவர் போகுமுன் “ ஒன்றுக்கும் யோசிக்காதேங்கோ இண்டைக்கு விடிய கட்டாயம் அவை வருவினம் இப்படி பனிக்குள்ள நாங்கள் கிடக்கிறம் எண்டு அவைக்கு நல்லா தெரியும் உங்களை ஆற்றைக் கடக்க வைச்சு கொண்டு போய் பஸ்சில ஏத்தி விடுவினம்,உடுப்புகளை மட்டும் கழற்றிப்போடாதேங்கோ“ என்று சொல்லிவிட்டுப் போனார் எங்காவது நெருப்பு மூட்டுவோம் என்று தேடினால் இறுதியில் ஒரு ஆற்றோர பாறை ஒன்றில் ஒதுக்கியிருந்த சருகுகளை எடுத்து குவித்து பச்சை குழைகளையும் முறிச்சு சேர்த்து ஆயத்தம் செய்தான் மகேந்தி. இரவு படுக்கையும் இல்லை இன்று இரவும் இங்கே தான் களைப்பு குளிர் நித்திரை என வாழ்ககை போதும் என்று ஆகிவிட்டது. நேரம் மதியமாகிக்கொண்டு இருந்தது. பனி கொட்டுவது கொஞ்சம் விட்டிருந்தது. ஆனால் அருகில் நின்ற பற்றை மரம் என எல்லாவற்றையும் மூடி பனி படிந்திருந்தது. தண்ணி விடாய்த்தால் பனியை அள்ளி வாயில் போட வேண்டியதுதான் ஆனால் குளிரையும் தாங்கிக்கொள்ள வேண்டும் சுள்ளிகளை சேர்த்து வைத்த விட்டு லையிற்றரை தேடினான். சறுட்டு போல முதுகுப் பையில் தட்டுப்பட்டது. லையிற்றரை எடுத்து அவனால்; அதனை பற்ற வைக்க முடியவில்லை விரல்கள் பிஞ்சுவிடும்போல இருந்தது. மற்றவர்கள் நனைந்த கோழி போல ஒட்டி நடுங்கிக்கொண்டு இருந்தார்கள். அவர்களை ஏதும் கேட்காமல் தானே விரலை ஊதி இரு கையையும் உரசி உணர்ச்சி வர வைத்தான். கை விறைத்து விட்டது கையுறையால் வெளியே எடுத்தால் விரல் மேலும் நோ எடுத்தது அவனுக்கு. முடியாமல் அருகில் இருந்தவர்களிடம் கொடுத்து கொழுத்தச் சொன்னான். அவர்களும் முயன்று பார்த்தார்கள். முடியவில்லை இறுதியில் பாக்கிஸ்தானியன் பற்ற வைத்தான். ஒரு மாதிரி நெருப்பு புகைந்து எரிய ஆரம்பித்தது. மெல்லச் சூடு வெளிவர ஆரம்பித்ததும் கை உறை கால் சப்பாத்துக்களை கழற்றி விட்டு புகையில் கை காலைகளை சூடு காட்டினார்கள். ஓரளவு கை கால் விரல்கள் உயிர் பெற பிரளயம் ஒன்ற வந்து தலையில் விழுந்தது. நெருப்பு சூட்டில் மரத்தில் மேலே படிந்திருந்த பனி உருகி உருகி கீழ் கிளைiயில் படிய கீழ் கிளை பாரம்’ தாங்க முடியமல் முறிந்து பனிகட்டியோடு அவர்கள் மேல் விழுந்தது. மகேந்தியின் கால் மரத்தினுள் அகப்பட்டது. மற்றவர்களை பனி மூடிவிட்டிருந்தது . நெருப்பு உயிரை விட்டு விட்டது. கொண்டு வந்த உடுப்புகள் பைகள் எல்லாம் பனியால் மூடி மரக்கிளையின் கீழ் கிடந்தது. பதறிக்கொண்டு எழுந்து உதறினோம். சிறு உராய்வும் தோலை கிழித்து இரத்தம் கசிந்தது. ஒருவாறு உடுப்புகளையும் வெளியே எடுத்து விட்டோம்.பொழுது படத்தொடங்கியது. எல்லோர் முகங்களிலும் ஒரு வித பீதி குடி கொண்டது. வயதானவர் சொல்லியிருந்தார்“வெட்டையிலதான் நெருப்பு மூட்ட வேணும் என்று. சிறு தவறும் இப்டி உயிருக்கு உலை வைக்கும் அளவு மோசமான விளைவை தரும்“ என்று. அதனை முதல் முதலாய் உணர்ந்தான் மகேந்தி. ஒட்டிக் காட்டிய ஆறு என்று ஒன்று இருந்தது ஆனால் அங்கே தண்ணி ஒன்றும் ஓடவில்லை இதனால் இலகுவில் கடந்து விடலாம் என்று நினைககக்;ககூடாது. அங்கு தான் ஆபத்து காத்திருந்துது ஆறு எது கரை எது என்று தெரியாமல் பனி மூடி நிறைந்திருந்தது இதனால் அதன் அருகில் போகவும் பயமாக இருந்தது எவ்வளவு ஆழமோ தெரியாது உள்ளே உறை நிலை சீதோசணத்தில் நீர் ஓடிக்கொண்டு இருக்கும். பனிக்கட்டி உடைந்து கால் உள்ளே போனால் அவரே தான் வெளியே வர வேண்டும் உதவிக்கு யாரும் அருகில் போனால் போறவரும் சேர்ந்தே உள்ள போக வேண்டி வரும். பனி பட்டால் தட்டி துடைத்து விடலாம் குளிர் நீரில் நனைந்தால் விறைத்து ஆளே முடிந்து விடும். கம்பளி உடுப்புகள் குளிருக்கு நல்லது என்றாலும் அவற்றில் ஈரம் பட்டாலோ இலகுவில் காயாது. இவர்கள் ஆளுக்கு மூன்று சோடி உடுப்பு வீதம் போட்டிருக்கிறார்கள். ஈரமானால் இன்னுமொருவரை சுமக்கும் சுமை ஏறிவிடும். மனம் மரணத்தை நோக்கி பயணிப்பதாக கண்கள் நடுங்கின. பொழுது பட்டு வானம் குளிரால் மூடி இருந்தது . பையில் இருக்கும் சிறு அளவு உணவை எடுத்து சாப்பிடநினைக்கும் போதும் குளிர் பயமாக இருந்தது. சொண்டுகள் வெடித்து விட்டிருந்தது தொட்டுப்பார்க்கும் போது யாரோ ஒருவரின் சொண்டு போல தொடு உணர்வின்றி மரத்து இருந்தது நெஞ்சுக்கூடு இதயத்தை இறுக்கிக்கொண்டு வருவது போல தோன்றியது. திரும்பிபோகவும் பாதை தெரியாது எங்கள் கண்களில் ஏக்கமும் மரணபீதியும் தொற்றிக்கொண்டது. இதற்குள் புருசோத் “ மச்சான் இனி பிடிபட்டா கொடுக்க பேரும் இல்லை என்றான் “ அவன் இதற்கு முன் மூன்று முறை பிடிபட்டு விடுவிக்கப்பட்டவன். இரண்டு முறை அண்ணா தம்பி போன்றவர்களின் பெயரை கொடுத்து தப்பி விட்டான் மூன்றாம்முறை பேர் இல்லாமல் அக்காவின் பெயர் பிறந்த திகதியை கொடுத்து புரட்சி செய்தவன் . இனி பிடிபட்டால் என்ன செய்வது என்ற யோசனை அவனுக்கு இதில் சுவாரசியம் என்ன என்றால் மூன்று முறையும் ஒரே சிறையில் தான் இப்படி பெயரை மாற்றி கொடுத்தான். பெயர் கேட்ட அதிகாரி அழுவாரைபோல் பொருமி வெடித்தாலும் ஒன்றும் செய்ய முடியாது முறைத்து முறைத்து பார்த்து அவனின் மொழியில் திட்டியிருக்கிறான் எப்போது அவர்கள் வருவார்கள் எப்போது மறு கரைக்கு போகலாம் என்பதை விட எப்போது வெப்பத்தை அணுகலாம் என்றே மனம் ஏங்கியது . பார்ப்பதற்கு இறந்த தாயை தேடும் இறக்கை முளைக்காத குருவி குஞ்சுகள் போல காத்திருந்தோம். நன்றாக இருட்டி விட்டது ப+மி மேகக்கூட்டம் போல வெள்ளையாகவும் மேகம் இருட்டாகவும் இருந்தது. தொலைவில் சிறு வெளிச்சம் மின்னி மின்னி மறைந்தது. எல்லை பாதுகாப்பு படையினர் இரவு வேளைகளில் ரோந்து வருவார்கள் கவனமாக இருக்க வேண்டும் பிடிபட்டால் பாம்பும் ஏணியும் விளையாட்டில் பாம்பின் வாயில் அகப்பட்டது போல மீண்டும் இலங்கைக்கே அனுப்பி விடுவார்கள் என்ற பயம் பற்றிப் பிடித்துக் கொண்டது. அந்த வெளிச்சம் அண்மித்துக்கொண்டிருந்தது. பாக்கிஸ்தான் நாட்டுகாரர்கள் இருவரும் சற்று உரமாக இருந்தார்கள். மகேந்தியுடன் ஒட்டிக்கொண்டு இருந்த ஆனந்தன் குளிர் தாங்க முடியாமல் நடுங்கியபடி அனுங்கிக்கொண்டு இருந்தான் அவனை சத்தம் வெளிய வராமல் சற்றுநேரம் இருக்குமாறு கண்ணீரால் கெஞ்சினான் மகேந்தி. அது அவனின் காதில் விழுந்ததா என்றும் தெரியவில்லை.அனுங்கலில் எந்த மாற்றமும் இல்லை. இப்போது அந்த வெளிச்சத்தை காணவில்லை அணைத்த விட்டு வருகிறார்களா இல்லை திரும்பி போய்விட்டார்களா என்று ஊகிக்க முடியாமல் இருந்தது. முறிந்த மர கொப்பின் பின் ஐவரும் பதுங்கிக் கொண்டார்கள் நேரம் கடந்துகொண்டு இருந்தது எவ்வளவு நேரம் தான் பனியில் தலையை புதைத்து கிடப்பது என்று மெல்ல தலையை உயர்த்தி பார்த்த விட்டு எழுந்து அமர்ந்தார்கள். தொலைவில் பேசுவது கேட்டது. மீண்டும் ஒருமிக்க தரையில் படுத்துக் கொண்டார்கள். அப்பேச்சு நெருங்கி வந்துகொண்டிருந்தது. மநே;தி அனுங்கிய ஆனந்தனை இறுக அணைத்தபடி அவன் வாயை பொத்தி நெஞ்சை தடவி விட்டு அனுக்கத்தை குறைக்க முயன்றேன். எந்த பலனும் இல்லை அவன் சுயநினைவு இழந்தவன் போலவே அனுங்கினான். பேச்சு மிக அருகில் கேட்டது. எல்லாம் சரி இனி நாடுதான் என நினைத்து கண்களை மூடிக்கொணடோம். எங்கள் காதுகளை எங்களாலேயே நம்ப முடியவில்லை பேச்சு தமிழில் கேட்டது. குதித்தெழுந்து “அண்ணா.. அண்ணாh நாங்க இங்க இருக்கிறோம்“ என்று கத்தினான். “ஓம் ஓம் நான் ஒரு கயிற எறியிறன் அதை இறுக்கி பிடிச்சுக்கொண்டு ஆத்தில இறங்குங்கோ என்று கூறி கயிற்றை எறிந்தார் ஒருவர் எல்லோரும் கயிற்றை பிடித்தக்கொண்டு மெல்ல ஆற்றில் இறங்கினார்கள் திடீரென ஆற்று பனிபடை உடைந்தது. மறுகரையில் நின்றவர்கள் கொற கொற என இழுத்து இக்கரைக்கு இழுத்து போட்டு விட்டு “விடிய வேற ஆக்கள் வந்து பஸ்சில ஏத்தி விடுவினம்” என்று மட்டும் மொட்டையாக சொல்லிவிட்டு சென்று விட்டார்கள். நனைந்து நடுங்கிக்கொண்டு இருந்தோம். பற்கள் கடுகடுத்தது. ஏறக்குறைய எல்லோரும் அனுங்க ஆரம்பித்தார்கள். இருவரைதவிர முன்னர் அனுங்கிய ஆனந்தன் இப்போது அமைதியாக இருந்தான். புருசோத் இன்னும் ஆற்றை கடக்கவில்லை அல்லது இந்த ஜென்மத்தையே கடந்திருக்க வேண்டும் கயிற்றை இறுக்கி பிடிக்காமல் இடையில் விட்டு விட்டான் ஆற்றில் பனி உடைந்து உள்ளே விழுந்து விட்டான் பனி பாறை மீண்டும் மிதந்து ஆற்றை மூடிக்கொண்டது அவன் உள்ளே அடங்கிப்போனான். இதை நாங்கள் அறியமுன் இழுத்தவர்கள் தெரிந்து கொண்டதால் தான் நிற்காமல் உடனே இடத்தை காலி செய்து விட்டார்கள். பொழுது விடிந்ததும் தான் இவர்களுக்கு தெரியவந்தது. ஆனாலும் அனுக்கமின்றி கிடந்த ஆனந்தனும் இறந்த புருசோத்துடன் இணைந்தமை இனி தான் இவர்களுக்கு தெரியவரப்போகிறது. சொன்னது போல் சிலர் வந்து விட்டார்கள் . இறந்த இருவரையும் நினைத்து ஒருவனின் உடலின் முன் சுற்றி அழுதகொண்டிருந்தவர்களை அழைத்துக்கொண்டு சென்றார்கள். இறந்தவனின் உடல் அங்கேயே தோண்டி புதைக்கப்பட்டது. மகேந்தி கதையைச் சொல்லி முடித்ததும் நீண்ட பெருமூச்சு விட்டான்,சில விநாடிகள் மௌனமானான். மகேந்தி என்ற மக்டொனால் மகேந்திரன் தான் அனுபவித்த துன்பத்தையும் தன்னோடு வந்த இருவர் இறந்து போனதையும் சொன்ன போது என்னை அறியாமலே என் கண்கள் குளமாகின. மகேந்திரன் சொல்லி முடித்த அகதிப்பயணக் கதையைக் கேட்ட போது அகதிப் பயணத்தில் நான் அனுபவித்த தன்பம் மிக மிகச் சாதரணமாகத் தோன்றியது. மகேந்திரனும் கண்களைத் துடைத்துக் கொண்டான். தனது கண் முன்னால் பனிக்கட்டி உடைந்து ஆற்றில் சமாதியாகிய புருசோத்தமனையும் தனது அருகிலேயே உயிர்பிரிந்த ஆனந்தனையும் அவனால் மறக்க முடியவில்லை. „எனக்கு திருமணமாகி ஒரு பெண்குழந்தையிருக்கின்றது,சந்தோசமாகவிருக்கிறேன்.ஆனால் அவர்கள் இருவரையும் என்னால் மறக்க முடியவில்லையென்றான்“. இதுவரையும் தனது அகதிப் பயணத்தை நகைச்சுவையுடனும் உவமான உவமயத்துடனும் வட்டார வழக்குத் தமிழிலும் சொல்லிக் கொண்டிருந்த மகேந்திரனின் முகத்தில் பழைய நகைச்சுவை கலந்து சிரிப்பு இல்லை. முகம் இறுகிப் போயிருந்தது. அவனின் மனநிலையை முகம் காட்டியதால். சுவிற்சலாந்துக்கு பிறகு எப்படி வந்தனீங்கள் என்பதை அவனிடம் கேட்க மனம் வரவில்லை. அவன் வேலையை ஆரம்பிக்கும் நேரம் வந்துவிட்டதால் என்னிடம் விடைபெற்றுச் சென்றுவிட்டான். நானும் மக்டொனால்ஸைவிட்டு வெளியே வந்து கொண்டிருந்தேன். (தொடரும்) 22
No comments:
Post a Comment