எழுத்தாளர் சிறீரஞ்சனி அவர்களின் அறிமுகம் தெல்லிப்பழையைச்
சேர்ந்த ஸ்ரீரஞ்சனிவிஜேந்திரா தற்போதுகனடாவில் வாழ்கிறார். இவரது முதலாவதுசிறுகதை, ‘மனக்கோலம்’, ஏப்ரல் 1984 ல்
வாழ்கிறார். இவரது முதலாவதுசிறுகதை, ‘மனக்கோலம்’, ஏப்ரல் 1984 ல் ஈழநாடு பத்திரிகையில்பிரசுரமானது.ஈழநாடு, தினக்குரல், மல்லிகை, ஞானம், நான், ஜீவநதி, உதயன், வைகறை, தூறல், காலம், காலச்சுவடு, யுகமாயினி,வல்லினம், பதிவுகள், மகாஜனன் ஆண்டுமலர்கள், திண்ணை, Tamailauthors.com, பாரதிதாசன் பல்கலைக்கழகக் கல்லூரிக் கைநூல், தாய்வீடு, முகங்கள் (புலம் பெயர் தமிழ் எழுத்தாளர்களின் சிறுகதைத் தொகுப்பு) போன்றவற்றில் இவரது சிறுகதைகள், கட்டுரைகள் பிரசுரமாகியுள்ளன.தெல்லிப்பழை மகாஜனாக் கல்லூரியின் நூற்றாண்டு நிறைவு நினைவாக,தமிழ் படிப்போம், பகுதி 1 & பகுதி 2 எனும் இரு நூல்களை 2009லும்நான் நிழலானால் – சிறுகதைத் தொகுப்பை (யுகமாயினி சித்தன் கலைக்கூட வெளியீடு)- 2010 லும் இவர் வெளியிட்டுள்ளார்.பேராதனைப் பல்கலைக்கழக பட்டதாரியான ஸ்ரீரஞ்சனி தற்போது அங்கீகாரம் பெற்ற ஒரு மொழிபெயர்ப்பாளராகவும் ரொறன்ரோ கல்விச்சபையின் ஒரு தமிழ் ஆசிரியராகவும் தொழில் புரிகின்றார்
விழுதல் என்பது எழுகையே பகுதி 22 எழுதியவர் சிறீரஞ்சனி கனடா
தொடர்கிறது…
மக்டொனால்ஸ் வேலை இப்ப சீலனுக்கு நன்றாகப் பழகிப் போய்விட்டது. ஆரம்பத்தில் இருந்த பதட்டமோ, குறித்த நேரத்தில் குறிப்பிட்டளவு வேலையைச் செய்ய வேண்டுமே என்ற ரென்சனோ அவனுக்கு இப்ப இல்லை. மனதை வேறு எங்காவது வைத்துக் கொண்டு ஓடர் எடுத்தாலும் கூட எந்தப் பிழையுமில்லாமல் எல்லாவற்றையும் செய்யும் அளவுக்கு அவனுக்கு வேலை இலேசாகி விட்டது.
‘சரி, நாளைக்குச் சந்திப்பம்.” என டொச்சில் மனேஜருக்குச் சொல்லிப்போட்டு சீலன் திரும்பிய போது அவன் முன்னே சிரித்த முகத்துடன் நின்றாள், பானு.
‘ஓ, பானு! நான் உங்களைச் சந்திப்பன் எண்டு எதிர்ப்பார்க்கவேயில்லை. என்ன நீங்க இண்டைக்கு வெள்ளனத் தொடங்கிறியளா? ”
பானுவைச் சந்தித்த மகிழ்ச்சி சீலனின் முகத்தில் பளிச்சிட்டது
‘இல்லை, சீலன். இவற்ரை இன்சூரன்ஸ் விசயமாக் கதைக்க லோயரிட்டைப் போக வேண்டியிருந்தது. அப்படியே அங்கையிருந்து நேரை இங்கை வாறன்.”
‘ஓ, அப்ப வேலைக்கு இன்னும் ஒரு மணித்தியாலம் இருக்கு, சாப்பிட்டிருக்க மாட்டியள் , வாங்கோவன் பக்கத்திலை இருக்கிற பீசாக் கடைக்குப் போவம் …. என்ரை ரீற்”
‘ஏன் சீலன், வீண் காசுச் செலவு? அதோடை நான் சாப்பாடு கொண்டு வந்தனான்.”
‘சரி, அதை பிரிஷ்லை வைச்சியள் எண்டால் நாளைக்குச் சாப்பிடலாம். இப்ப என்னோடை சாப்பிடலாம் வாங்கோ. நெடுகக் காசு காசு எண்டு யோசித்தம் எண்டால் ஒண்டையும் நாங்கள் அனுபவிக்கேலாது.” என உரிமையுடன் அவளை அழைத்தான்.
சீலனுக்கு பானுவில் ஒரு தனி மரியாதையும் பிடிப்பும் உண்டு.
பக்ரறியிலை வேலை செய்யும்போது ஓடிக்கொண்டிருந்த மெசினுக்குள் கை சிக்கியதால், ஆறு மாதத்துக்கு முன்பாக, தனது வலது கையின் இரண்டு விரல்களை இழந்து போனான் அவளின் கணவன். காலம் அவனின் உடல் காயத்தை ஒருவாறாகத் தேற்றி விட்டிருந்தாலும் கூட அவனின் மனக் காயம் நாள் ஆக ஆக இன்னும் கூடிக் கொண்டுபோற மாதிரித்தானிருக்கிறது. விபத்தின் விளைவுகளால் மனநிலை மிகவும் பாதிக்கப்பட்டு அதற்கான கவுன்சலிங்கும் மருந்துகளுமாக வாழ்கின்றான், அவன். அந்தச் சுமை பானுவையும் வெகுவாகத் தாக்குகிறது என்பதைச் சீலன் நன்கறிவான்.
வாழ்க்கைதான் எவ்வளவு விசித்திரமானது. ஊரில் இருந்த பிரச்சினைகளாலை பாதிக்கப்பட்டவர்களுக்கு, அங்கே கவுன்சிலிங் செய்து ஆறுதல் கொடுத்த பானு, இப்ப இங்கே, தான் படித்ததை தனக்குப் பாவிக்க முடியாமல் திண்டாடுவது கொடுமையிலும் பெரிய கொடுமைதான்.
இரண்டு சின்னப் பிள்ளைகள், மனநோயுள்ள கணவன், மிகத்துரிதமாகத் தொழிற்பட வேண்டிய மக்டொனால்ஸ் வேலை, கணவனின் இன்சூரன்ஸ் பிரச்சினை, அத்தனைக்கும் மேலாக அவன் அவளுக்குக் கொடுக்கும் மனக் கஷ்டங்கள் என அவள் படும் பாட்டை பார்க்கும் போது தன்னுடைய பிரச்சினை பெரிய பிரச்சினை இல்லை எனக் கூட பல சமயங்களில் சீலனுக்குத் தோன்றுவதுண்டு.
பானுவைப் பார்க்கும் எவரும், அவளுக்கு இத்தனை பிரச்சினை இருக்கின்றது எனச் சொன்னால் கூட நம்ப மாட்டார்கள். அந்தளவுக்கு அந்த முகத்தில் ஒரு அமைதியும் சிரிப்பும் எந்த நேரமும் குடிகொண்டிருக்கும்.
அவள் தான் அவனுக்கு மக்டொனால்ஸ்சில் வேலை பழக்கினாள். அப்படி ஆரம்பித்த அறிமுகம்தான் இப்ப இப்படி நல்லதொரு நட்பாக அவர்களிடையே மலர்ந்துள்ளது.
ஊரிலே பெண்களுடன் கதைப்பது என்பது, ஏதோ சந்திர மண்டலுத்துக்குப் போவது மாதிரி அத்தனை சவால், பரபரப்பு நிறைந்ததாக இருக்கும். அதனால் தான் போலும் அங்கே கண்டவுடனே காதல் வாறதாக்கும் என நினைத்த போது சீலனுக்குச் சிரிப்பு வந்தது. ஆனால், இங்கே, எந்தப் பேதமும் இன்றி ஆணும் பெண்ணும் மிக நல்ல நண்பர்களாக இருக்க முடிகிறது. ஆம், அவனும் அவளும் ஆளுக்கு ஆள் தங்களது பிரச்சினைகளைச் சொல்லி ஆறுதல் அடையக்கூடிய அளவுக்கு நல்ல நண்பர்களாக இருக்கிறார்கள்.
ஆனால் இப்ப வேலை நேரங்கள் மாற்றப்பட்டாதால் ஒரு மாதமாக அவளை அவன் காணவில்லை.
‘என்ன மௌனம் சீலன், எல்லாம் ஓகேயா?”, பீசாக் கடையை நோக்கி நடந்தபோது அவர்களுக்குள் இருந்த அந்த மௌனத்தைப் பானுதான் உடைத்தாள்.
“வாழ்க்கையின் வினோதங்களை நினைச்சுப் பாத்தன் பானு, இந்தப் புகலிட வாழ்வில்தான் எத்தனை வித்தியாசமான அனுபவங்கள் எங்களுக்கு…. போதாதற்கு பெயரே கேள்விப்பட்டிராத பாசைகளைக்கூட எவ்வளவு கஷ்டப்பட்டுப் படிக்கிறம். எங்கடை நாட்டிலை இருந்தது ஆக இரண்டே இரண்டு மொழிகள் தான். இருந்தும் மற்ற மொழியிலை இரண்டு சொல்லுக்கூட சொல்ல எங்களில் பலருக்குத் தெரியாது. நாங்கள் இரண்டு மொழிக்காரரும் ஒருத்தரின்ரை மொழியை ஒருத்தர் படிச்சிருந்தால், இனப் பிரச்சினை இப்படி உச்சத்துக்குப் போய் இவ்வளவு அழிவு நிகழாமல் இருந்திருக்குமோ என்றெல்லாம் இப்ப என்ரை மனம் தத்துவ விசாரணை செய்கிறது, பானு” என்றான்.
“ஒன்றும் படிக்கக்கூட வேண்டாம். ஒருத்தரை ஒருவர் விளங்கி, ஆளுக்கு ஆள் மதிப்புக் கொடுத்து நடந்தால் போதாதே? இப்ப பஸ்சிலை வரேக்கை மனுஷபுத்திரனின்ரை ஒரு கவிதை படிச்சன், கேளுங்கோ…”
ஒருமை- பன்மை
‘எந்தக் கணத்தில்
என்னை அழைப்பதில்
பன்மையிலிருந்து
ஒருமைக்கு மாறினாய்?
பன்மையிலிருந்து
ஒருமைக்கு மாறும்போது
ஆட்டத்தின் ஒரு விதி மாற்றப்படுகிறது
சீட்டுக்கட்டில் ஒரு சீட்டு
ரகசியமாக இடம் மாறுகிறது
ஓசையில்லாமல் ஒரு பூனை
அறைக்குள் நுழைகிறது
கிணற்றுத் தண்ணீரின் சுவை
திடீரென மாற்றமடைகிறது
ஒரு அனுமதிச் சீட்டின்
ஓரத்தில் கிழிக்கப்படுகிறது”
‘ஓம், கவிதை சொல்ற மாதிரி உறவு ஒன்று நெருக்கமாகும் போது எவ்வளவு சந்தோசப்படுறம். மரியாதையை, உரிமையை விட்டுக் கொடுக்கிறதிலை கூட ஒரு மகிழ்ச்சியை அனுபவிக்கிறம் …. ஆனால் பிறகு அதைச் சகபாடி துஸ்பிரயோகம் செய்யேக்கைதானே பிரச்சினையே ஆரம்பமாகுது.”
‘அதைத்தான் நானும் சொல்ல வாறன், சீலன். இன்னொருவரை, இன்னொரு இனத்தை நசுக்கி மற்றவரோ அல்லது மற்ற இனமோ நன்மை அடைய முயற்சிக்கும் போது எல்லாமே பிரச்சினைதான் ” என்றாள் பானு விரக்தியாக.
பீசா ஓடர் பண்ணிச் சாப்பிட்டு முடிக்கும் வரை பொதுவாகவும் குறிப்பாகவும் அவளுடன் கதைத்தது சீலனின் மனசுக்கு கொஞ்சம் இதமாக இருந்தது. அவள் சொன்ன அந்தக் கவிதைக்குள்தான் எத்தனை பொருள் இருக்கிறது என அதிசயித்தான் அவன்.
போகிற வழியில், வீட்டுக்குக் காசு அனுப்பிப் போட்டு, தவத்தாரையும் சந்திக்க வேண்டும் என நினைத்த சீலன், பானுவுடன் சேர்ந்து மீண்டும் மக்டொனால்ஸ்க்குப் போய் தவத்தாருக்காக இரண்டு கம்பெக்கரை வாங்கிக் கொண்டு வெளியில் வந்தான்.
சில நாட்களாக பனி கொட்டாமல் வெப்பம் சிறிதும் குளிர் அதிகமாகவும் இருந்தது. மீண்டும் பனி கொட்டத் தொடங்கியது.
வெண்பனி பூத் தூவி அவனை வரவேற்றது. பனி கொட்டும் அழகைப் பாத்ததும் சின்னக் குழந்தை மாதிரி அவன் மனசு குதூகலித்தது. முதல் முதல் அவன் அனுபவிக்கும் பனிக் குளியல் அது. மழையில் மட்டுமே நனைந்து பழகியவனுக்கு பனிக் குளியல் மிகவும் வினோதமான அனுபவத்தைக் கொடுத்தது. மெதுவாக நாக்கை நீட்டி விழும் பனியைச் சுவைத்துப் பார்த்தான்.
அந்த இனிமையுடன் பானுவுடன் கதைத்தவை அவன் மனசுக்குள் மீளவும் மீளவும் ஓடிகொண்டிருந்தன.
‘சீலன், இனி வேலையோடை எதையாவது நீங்கள் படிக்கத் தொடங்கிறது நல்லம். அதைப் பற்றி ஏதாவது யோசித்துப் பாத்தனீங்களோ?”
‘ஓம், படிக்கத்தான் வேணும், பாப்பம், முதலிலை கடன் முடியட்டும்”
‘கடன் முடியும்வரை பாப்பம், எண்டு பாத்தீங்கள் எண்டால் பிறகு தங்கைச்சியின்ரை கலியாணம் அது இது எண்டு நெடுக ஏதாவது ஒரு காரணம் வந்து கொண்டேயிருக்கும். அதோடை கலா டொக்டரானால் நீங்களும் அது மாதிரி ஒரு தகுதியைத் தேடிக்கொள்ளுறதுதான் உங்கள் இரண்டு பேருக்கும் நல்லது. அல்லது நீங்கள் என்ன தான் சொன்னாலும், ஒரு தாழ்வு மனப்பான்மை உங்களை வாட்டிக்கொண்டேயிருக்கும்.”
‘இதைத் தான் தவத்தாரும் அண்டைக்கு இன்னொரு விதத்திலை சொன்னவர். பெண்சாதிமாரைக் கூப்பிட்டு அவையைப் படிக்கவிட்டிட்டு, பிறகு அவை ஒவிஸ் வேலை பாக்க, ஆம்பிளைகள் பக்ரறியிலை முறிஞ்சு போட்டு வீட்டை வந்து தாழ்வுச்சிக்கலிலை அவையளைப் படுத்தாத பாடு படுத்தியினமாம்.”
‘மனிசன்மாரால்தானே தாங்கள் அப்படி ஒரு நிலைக்கு வந்தவை எண்டு சில பொம்பிளையளும் யோசிக்கிறதுமில்லை, மதிக்கிறதுமில்லைத்தான். எல்லாப் பக்கமாயும்
தான் பிரச்சினை இருக்குது.
தொடரும் 23
No comments:
Post a Comment