சுவிஸிலிருந்து பொலிகை ஜெயா
பகுதி 27
சிறிது நேரம் அவனை கவனித்தவள், 'என்ன சீலன் கண்கள் கலங்கியிருக்கு முகத்தில் எவ்வித களையும் இல்லாமல் சோகத்துடன் இருப்பது போல் தெரிகிறது,
என்ன நடந்தது கலாவுக்கு கனடாவில் முரளியை முடிவு செய்து விட்டார்களா? அல்லது அம்மாவுக்கு உடம்பு சரியில்லையா?'என தனது சகோதரனை கேட்பதுபோல உரிமையுடன் கேட்டாள்.
அவனோ பதில் எதுவும் கூறாது அமைதியாக இருந்தான்.மீண்டும் பானு கேட்டாள்.
அவனை நேசிக்கும் இரு உள்ளங்களில் பானுவும் ஒருத்தி.அவளிடம் தனது பிரச்சனைகளை சொன்னால் மனதுக்காவது சிறு ஆறுதல் கிடைக்கும் என எண்ணியவாறு...
தனது மவுனத்தை கலைத்து „அக்கா! .. எனக்கு.. என இழுத்தான்.'எதுவாக இருந்தாலும் தயங்காது சொல்லுங்கள் என்றாள்' பானு.
'தங்கச்சிக்கு கொழும்பில் வெளிவாரி பட்டப்படிப்புக்கு இடம் கிடைத்துள்ளது.அம்மா தங்கச்சியை கூட்டி வந்து வெள்ளவத்தை இராம கிருஷ்ணன் விடுதியில் நிற்கிறா.
அடுத்த மாதம் படிப்பு தொடங்குகிறது.குமர்ப்பிள்ளை.தனிமையில் இருக்க விட முடியாது.இருவருக்கும் கொழும்பு புதிய இடம்.அங்கு எவரையும் தெரியாது.யாரையும் அங்கு நம்பவும் முடியாதல்லவா?'
அதனால் ஒரு வீடு வாடகைக்கு எடுக்கவேணும்.அம்மா ஏற்கனவே வெள்ளவத்தையில் வீடு ஒன்று பார்த்துள்ளா. அவ்வீட்டிற்கு வாடகை முற்பணம் வேறு செலுத்த வேணும் மாதா மாதம் தங்கச்சியின் கல்விச் செலவு நான் இங்கு வருவதற்காக பட்ட கடன் எனது முடிக்கபடாத டாக்டர் படிப்பை தொடர இங்கு ஆங்கிலமும் டொச்சும் பயில விண்ணப்பித்துள்ளேன்.இன்னு இரு மாதமளவில் என் படிப்பை தொடங்கலாம் என எண்ணுகிறேன்.நீங்களும் மொழி தெரிந்தால் நல்ல வேலை எடுக்க முடியும் எனக் கூறினீர்கள்' என்றான் சீலன்.
„முதல் நீங்கள் கவலையை விடுங்கள் .மனதை தேற்றிக்கொள்ளுங்கள்.சகலதும் மெல்ல மெல்ல ஒழுங்காக நிறைவேறும்.நீங்கள் விரும்பினால் சொல்லுங்கள் .நான் வேலை செய்யும் கம்பனியில் உங்களுக்கு அதிகாலையில் பேப்பர் போடும் வேலை பெற்று தருகிறேன். நீங்கள் பேப்பர் போட்டு விட்டு இங்கு பத்து மணி வேலைக்கு அல்லது ஒருமணி வேலைக்கு வர முடியும்.இரவு வேலையை தவிர்ப்பது உங்களுக்கு நல்லது.நீங்கள் நித்திரைகொண்டுவிட்டு அதிகாலை பேப்பர் போட வசதியாக இருக்கும்.அத்தோடு உங்களுடைய உடம்பையும் பாது காத்திட முடியும்' என்றாள்.
„ஓம் அக்கா நல்ல யோசனைதான்.ஆனால் இங்கு எனது வேலை நேரம் ஒத்து வராதே.இரவு ஒரு மணிக்கு வேலை முடித்து எப்படியக்கா அதிகாலை நாலு மணிக்கு தூக்கத்தை விட்டெழுந்து பேப்பர் போட செல்ல முடியும்?
'நீங்கள் அதைப்பற்றி யோசிக்க வேண்டாம்.இங்கு படிப்பதற்கும் இராணுவ பயிற்சிக்கும் முதலாளிகள் நிறுவனங்கள் ஊழியர்கள் கேட்கும் நேரங்களைஒதுக்கி கொடுக்கவேண்டியது கட்டாயம்.அது சட்டத்திலே கூட உண்டு'.எமது மனேஜர் பீல்மான் நல்லவர் என்பது உங்களுக்கு தெரியும் தானே'.
„ஓம் அக்கா நீங்களும் பேசிப்பாருங்கள்.நானும் எனது படிப்பு பற்றி மனேஜருக்கு சொல்லுகிறேன்.அப்படி இரவு வேலையை தவிர்த்தால் என் எதிர்கால கல்வியை கற்பதற்கும் இரண்டாவது வேலை செய்வதற்கும் பெரும் வசதியாக அமையும்'.
'சீலன்! இப்ப அம்மாவுக்கும் தங்கச்சிக்கும் வீடு எடுக்க எவ்வளவு பணம் தேவை'?
'அது.....அது....வந்து...வந்து...அக்கா...' என இழுத்தான் சீலன்.
'சங்கடப்படாது சொல்லுங்கள் என்றாள்' பானு.
„இலங்கைப்பணம் எப்படியும் மூன்று இலட்சம் தேவை' என்றான்.அவள் சிறிது யோசனையின் பின், „ அப்பணத்தை நான் தருகிறேன்.நீங்கள் உடனே அம்மாவுக்கு அனுப்பிவிடுங்கள்' என்று சொன்னதை சீலன் சிறிதும் எதிர்பார்க்கவில்லை பானு தனக்கு பணம் தருவாள் என்று, „அக்கா என்ன சொல்லுகிறீர்கள்? என அவளை பார்த்தான்.
அவன் பார்வையின் அர்த்தத்தை புரிந்திட்ட பானு புன்சிரிப்புடன் உண்மையாகத்தான் சொல்லுகிறன் சீலன் நான் பணம் தருகிறேன் என்றவள் தொடர்ந்து
எனக்கு நீங்கள் உடனே திருப்பிதரவேண்டும் என்ற அவசரம் இல்லை.உனது பதின்மூன்றாவது சம்பளத்தில் திரும்ப தந்தால் போதும் எனச் சொன்ன போது அவனையறியாது உணர்ச்சி பெருக்கத்தில் அவளது வலது கரத்தை பற்றி நன்றி கலந்த கண்களுடன் அவளை பார்த்தான்.
பதிலுக்கு அவளும் தன் பரவாயில்லை என்னும் சைகையை வெளிப்படுத்தினாள்.
இரு கிழமைகளின் பின்னர் பானு மனேஜருடன் பேசி சீலனுக்கு இரவு வேலையை தவிர்த்து பகல் வேலைக்கான அனுமதியை பெற்று கொடுத்தாள்.
ஆனால் சனிகிழமை மட்டும் இரவு வேலை சீலன் செய்தே ஆக வேண்டும்.அது கூட அவனுக்கு வசதியாகவே இருந்தது.மறுநாள் பேப்பர் போடும் வேலை இல்லை. விண்ணப்பித்த படிப்பு தொடங்கினால் அதற்கும் ஞாயிறு விடுமுறை நாள்.நன்றாக தூங்கி உடலலுப்பை போக்க முடியும் என தனக்குள் நினைத்துக் கொண்டான்.
அன்று மாலை வேலை முடிந்து வீட்டிற்கு மிக உற்சாகத்துடன் வந்து அன்றைய வீட்டு காரியங்களை முடித்துஇதொலைக்காட்சி பார்க்க விரும்பாது முன்னர் அறிமுகமற்ற நல்ல உள்ளம் படைத்த பானு அக்கா நான் எதிர்பாராத உதவிகளை எனக்கு செய்கிறா என வியந்து இப்பெரும் உதவிகளுக்கு நான் எப்படி நன்றிக்கடன் செலுத்தப்போகிறேன் என்ற பரிதவிப்புடனும் மறுநாள் காலை தாய்க்கும்காதலி கலாவுக்கும் வீடு எடுப்பதற்கான பணமும் இரண்டாவது வேலையும் கிடைக்க இருக்கும் செய்தியை கூற வேண்டும் என்ற ஆவலில் விழுதல் என்பது மறுபடியும் வீழ்ந்து விடாதிருப்பதற்கான முன் எச்சரிக்கையும் வாழ்வின் முன்னேற்றத்திற்கு முயல வைக்கும் முதல் படியுமே ஆகும் என்ற எண்ணக்கருவுடன் இனிது தூங்கி விட்டான்.
(தொடரும் )
தொடர்ச்சி 28 (எழுதுபவர் திருமதி. தேனம்மை இலட்சுமனன் இந்தியா)
No comments:
Post a Comment