பகுதி: 28 - Koddaikallar Info

Breaking

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Thursday, November 27, 2014

பகுதி: 28

பகுதி: 28 
எழுதியவர்: திருமதி. தேனம்மை லக்ஸ்மணன்  --- கைதராபாத், இந்தியா
திருமதி.தேனம்மை லக்ஸமணன் பற்றிய அறிமுகம்
வசிப்பிடம்: கைதராபாத், இந்தியா (காரைக்குடி, சென்னை,தமிழ்நாடு) இளங்கலை வேதியல் பட்டதாரி (B. Sc (Chemistry) முதுநிலை அரசியல் அறிவியல்  பட்டதாரி                 (M.A  Political Science)
புத்தக ஆசிரியர்,சுதந்திர எழுத்தாளர்,ஊடகவியலாளர், கவிஞர்,
வலைப்பதிவர்,சிறப்புப் பேச்சாளர்,வசனகர்த்தா,பாடலாசிரியர், நிகழ்ச்சித் தொகுப்பாளர்,நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்.
மூன்று புத்தகங்களின் ஆசிரியர்: 'சாதனை அரசிகள்' (போராடி ஜெயித்த பெண்களின் சாதனைக் கதைகள்) 'ங்கா' (குழந்தைக் கவிதைகள்) 'அன்னப் பட்சி' (கவிதைத் தொகுப்பு)
தினமணி- காரைக்குடி புத்தகத் திருவிழா இணைந்து நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றமை, தினமலரில் 4 சிறுகதைகள், குங்குமத்தில் 4 சிறுகதைகள், புதிய தரிசனத்தில் 2 சிறுகதைகள் வெளியாகின.சிறந்த வலைப்பதிவாளராக 25 விருதுகளுக்கு மேல் வாங்கியமை.
இவருடைய வலைப்பதிவில்  கதை,கவிதை,கட்டுரை,சினிமா,புத்தக விமர்சனம்,நிகழ்வுப் பகிர்வுகள்,புத்தக வெளியீடுகள், போன்றவை வலைப்பதிவில் பதிவேற்றம் செய்தல் சமையல் குறிப்புகள், இளமைக்கால பள்ளிப்பருவ காலக் கவிதைகளை, சமையல் குறிப்புகளை வலைப்பதிவில் பதிவு செய்தல்.
இதுவரை 1500 கவிதைகளை எழுதியிருக்கிறார்.லேடீஸ் ஸ்பெசல், இவள் பதியவள்,சூரியக்கதிர்,நம் தோழி, குமுதம் பக்தி ஸ்பெஸல் ஆகியவற்றில் கட்டுரைகள் பேட்டிகள் கோலங்கள்.குங்குமத்தில் 4 சிறுகதைகள்,3 கவிதைகள் வெளிவந்துள்ளன.சமையல் குறிப்புகள்,உணவுக் குறிப்புகள் வெளிவந்துள்ளன.
குமுதத்தில் 'அம்மா யானை' என்ற தலைப்பில் குழந்தைக் கவிதைகளும் 11 கைக்கூ கவிதைகளும் வெளிவந்துள்ளன.பூஜை அறைக் கோலங்கள் என்ற தலைப்பில் 300 கோலங்கள் வரை வெளிவந்துள்ளன.
குமுதம் கெல்த் ஸ்பெஸலில்( Kumutham Health Special )'மேக்கப்பிற்கு பேக்கப'; என்ற தலைப்பில் இவரின் கருத்து வெளிவந்துள்ளது. ஆனந்தவிகடன் சொல்வனத்தில் 8 கவிதைகள் வெளிவந்துள்ளன. கல்கியில் 4 கவிதைகள் வெளிவந்துள்ளன. இந்தியா ருடேயில் ரஜனி பற்றி இவர் கூறிய கருத்து வெளிவந்துள்ளது. அவள் விகடனில் ஒரு கவிதை வெளியாகியுள்ளது.தேவதையில் ஒரு கவிதை வெளியாகியுள்ளது.மல்லிகை மகளில் இரு கவிதைகளும் 9 குட்டிக் கவிதைகளும் வெளியாகியுள்ளன.அவுஸ்திரேலியாவிலிருந்து வெளிவரும் 'மெல்லினம்' இதழில் 'பெண் மொழி'என்ற தலைப்பில் 30 கட்டுரைகளும், ஒரு கவிதையும் வெளிவந்துள்ளன.'இணையதள ப்ளாகர்'என்ற தலைப்பில் 'நம் உரத்த சிந்தனை'இதழில் இவரைப் பற்றி வெளியாகி உள்ளது.
'சாதனை அரசி' 'ங்கா' ஆகிய இவரின் நூல்கள் பற்றிய விமர்சனத்தை திருச்சி தினமலர்'பதிப்பிலும் இந்தியா ருடேயிலும்,லேடீஸ் ஸ்பெஸலிலும் வெளியிட்டுள்ளன.
இவ்விரு நூல்களும் பல்வேறு கல்லூரிகளிலும், பள்ளிகளிலும் இடம்பெற்றுள்ளன.
மக்கள் தொலைக்காட்சியில் சாதனை அரசி நூல் பற்றிய விமர்சனம் இடம்பெற்றிருந்தது, கலைஞர் தொலைக்காட்சி, விஜய் தொலைக்காட்சி ஆகியவற்றின் நிகழ்ச்சிகளில் இவர் பங்கு கொண்டிருந்தார்
(குறிப்பு: திருமதி. தேனம்மை லக்ஸ்மணன் அவர்களின் கலை இலக்கிய பன்முகத்தளங்களில் இவரின் செயல்பாடுகள் வியப்பைத்தரும் அளவிற்கு மிக அதிகமாகவே உண்டு. அவற்றிலிருந்து பெறப்பட்ட சுருக்கமே இது.முழு விபரத்தையும் காலக்கிரமத்தில் 'தமிழ் எழுத்தாளர் இணைய அகம் முகநூலில் வெளியிடுவோம்.)
தகவல் தொகுப்பு
பண்ணாகம் திரு.இக.கிட்ணமூர்த்தி 
திரு.எலையா முருகதாசன்
(தமிழ் எழுத்தாளர் இணைய அகம்)


பகுதி 28 தொடர்கிறது.

கிளிக்...கிளிக்  என்று ஒரு சத்தம்.பக்கத்திலிருந்த பெண் கைத்தொலைபேசியால் பஞ்சுப் பொதியாய்க் குவிந்திருக்கும் மேகங்களை விமானத்தின் கண்ணாடி வழியாக சுட்டுக் கொண்டிருந்தாள்.
லேசாக கண்ணயர்ந்த மங்கையற்கரசிக்கு இந்தச் சத்தம் விழிப்பைக் கொடுக்கவே திரும்பிப் பார்த்தார்.அவள் திரும்பிப் புன்னகைத்து முகநூலில் பதிவேற்றம் செய்வதற்கு புகைப்படம் பிடிப்பதாகக் கூறினாள்.வாழ்க்கை வாழ்வதற்கே என்று எண்ணும் இளையதலைமுறையினரில் இவளும் ஒருத்தி.அவளைப் பாரத்து மங்கையற்கரசியும் நட்போடு புன்னகைத்தாள்.
மங்கையற்கரசி மதுரைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்ப் பேராசிரியை. ஐரோப்பிய நாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்களின் அழைப்பின் பேரில் அங்கே உரையாற்றச் செல்வதற்காக இந்தப் பயணம் மேற்கொண்டிருந்தார்.
முதல்நாள் கனடாவில் சந்தித்துவிட்டு வந்த பத்மகலாவின் சாயல் தனக்கருகில் இருந்த  இவளிடம் லேசாக இருந்தது. பத்மகலாவை முதன்முதலாக யாழ்ப்பாண பல்கலைக் கழகத்துக்கு சிறப்பு அழைப்பாளராக உரையாற்றச்  சென்ற போது சந்தித்தது நினைவுக்கு வந்தது.
„தமிழரும் மூலிகை மருத்துவமும்'என்ற தலைப்பில் உரையாற்றச் சென்ற அவரை யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சரவணபவான் அவரை அழைத்துச் செல்வதற்காக கொழும்பு விமான நிலையத்திற்கு வந்திருந்த போது அவருடன் பத்மகலாவும் சீலனும் வந்திருந்தனர்.
பேராசியர் சரவணபவான் ஏற்கனவே பேராசிரியை மங்கையற்கரசிக்கு அறிமுகமானவர். மதுரைப் பல்கலைக்கழகத்திற்கு பேராசிரியர் சரவணபவானும் சென்று வந்திருக்கிறார். விமான நிலையத்தில் வைத்து பத்மகலாவையும் சீலனையும் பேராசிரியர் மங்கையற்கரசிக்கு அறிமுகம் செய்து வைத்த அவர்'இவர்களிருவருமே நீங்கள் மதுரைக்கு செல்லும் வரை உங்களுக்கான உணவு தங்குமிட வசதி போன்றவற்றை மேற்கொள்வார்கள்' எனச் சொன்னார்.
ஈழத்தில் தங்கியிருந்த ஒரு வாரத்திற்கும் பத்மகலாவும் சீலனும் அன்போடும் மிகுந்த அக்கறையுடனும் பேராசிரியைக் கவனித்துக் கொண்டனர்.பத்மகலா மீன்பாடும் தேன்நாடான  மட்டக்களப்பிலிருந்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்கு படிக்க வந்து பல்கலைக்கழகத்திற்கு அருகாமையில் தனது தோழியர்களுடன் சேர்ந்து ஒரு வீடு எடுத்து தங்கியிருந்தார்.
பேராசிரியை  அவர்களுடன் தங்குவதற்கு விருப்புக் கொண்டதால் தங்குவதற்கு விடுதி வேண்டாம் என்று சொல்லி அந்த ஒரு வாரத்திற்கும் பத்மகலாவுடனேயே தங்கியிருந்தார். பத்மகலா மட்டக்களப்பிலிருந்து ஒருவகையான அரிசி கொண்டு வந்திருந்தார்.அதன் சுவையே தனிரகமானது.
சீலனும் தனது தாயாரைக் கொண்டும் ஆப்பம்,பிட்டு,பொரித்த மிளகாயில் தேங்காய்ச் சம்பல்,ரொட்டியும் உருளைக்கிழங்கு மசியல்,இடியப்பம் பால்சொதி,சக்கரைப் பொங்கல்,குழம்பு சமைப்பித்துக் கொண்டு வந்து பத்மகலாவிடம் கொடுத்தும், பத்மகலாவும்  சீலனும் விதம் விதமாக உணவு தந்து என்னைத் திக்குமுக்காட வைத்தனர்.
அவர்களுக்குள் தோழமையைத் தாண்டிய ஒரு ஈர்ப்பு அவர்களுக்குள் இருப்பதை பேராசிரியையால்  கவனிக்க முடிந்தது. சீலனும் பத்மகலாவும் ஒவ்வொரு வேளையும் அவரைக் கவனித்துக் கொண்டதோடு மட்டமல்ல அவர் ஆசைப்பட்ட யாழ்ப்பாணம் பொதுநூலகத்திற்கு கூட்டிச் சென்று காண்பித்தனர்.அப்போது அவர் பேசுவதை எல்லாம் கேட்பதில் அவர்களுக்கு அலாதிப் பிரியம்.
எப்பேர்ப்பட்ட நூலகம்.இன்றைக்கெல்லாம் கிடைக்குமா அப்பேர்ப்பட்ட ஓலைச்சுவடிகள். அவர் கல்லூரிக்காலத்தில் படிக்கும் போது அங்கிருந்த நூல்கள் எரியூட்டப்பட்ட செய்தி கேட்டறிந்து பரிதவித்தது பற்றி ஆதங்கத்துடன் பகிர்ந்து கொண்டார்.
ஒருவர் மொழியைப் புத்தகங்களை எரிப்பதன் மூலம் அவர்களை வேரோடு அழித்துவிட முடியும் என்று எண்ணுவது எவ்வளவு கொடுங்கனவு.பேராயர் ஜெபநேசனும்,நூலகர் செல்வராஜாவும்,வி.எஸ்.துரைராஜாவும் எழுதி இருந்ததைப் படிக்கும் போது தன் ரத்தம் எவ்வாறு கொதித்தது என்று அவர் சொல்லும் போது முகம் எல்லாம் சிவந்து விட்டிருந்தது. உணர்ச்சிப்பெருக்கில் அதiனைச் சுற்றி சுற்றி வந்து கொண்டிருந்தார்.
இன்றைக்கு திரும்ப நெடிதுயர்ந்து நின்றாலும் சில மூலிகை மருத்துவக் குறிப்புகள் கொண்ட ஒலைச்சுவடிகளும் எரியூட்டப்பட்டிருக்கலாம் என்பது அவர் அனுமானம். வெளியே வந்த அவர்கள் சில மீற்றர் தூரத்திலிருந்த சுப்பிரமணியம் பூங்காவில் அமர்ந்து கொண்டனர்.
இன்றைய ஆங்கில மருத்துவம் நோய்வந்தபின் மருந்து கொடுத்துக் குணமாக்குவது.நோய் மூலத்தை ஆராய்வதல்ல.தமிழர் சித்தமருத்துவம் நோய்நாடி நோய் முதல் நாடி மருத்துவம் அளிப்பது.ஆங்கில மருந்துகள் விற்பனைக்காக நோயை உருவாக்கிப் பின் அதற்கான மருந்தை விற்பனைக்கு கொண்டு வருபவை.
நம் முன்னோர்களின் மூலிகை குறிப்புகளில் எய்ட்ஸிலிருந்து எல்லா வியாதிக்கும் மருந்து இருக்கிறது.சிலவற்றின் வேர்,சிலவற்றின் பட்டை,சிலவற்றின் இலைகள் இப்படி.அவற்றை எல்லாம்  உரிமையம் அடிப்படையில் வாங்கி வைத்துக் கொண்டு ஒவ்வொரு நாட்டினரையும் நவீன முறையில் அடிமைப்படுத்தல் நடக்கிறது. நில வேம்பின் பட்டையைக் காய்ச்சிக் குடித்தால் காய்ச்சல் மட்டுப்படும்.இதைக்கூட தங்கள் நாட்டுமரம் என்ற உரிமையத்தை வாங்கி வைத்துக் கொள்ள முயற்சி நடக்கிறது. அதன் பின் நம்முடைய வேரையும் மூலிகைகளையும் பயன்படுத்துவதற்கு நாங்கள் அவர்களுக்கு கப்பம் கட்ட வேண்டிவரும்.பேராசிரியை மங்கையற்கரசி சொல்வதைக் கேட்டு சீலனும் பத்மகலாவும்'ஓம் அது உண்மைதான் புரொபஸர்' என ஆமோதித்தனர். 
பத்மகலாவினதும் தருமசீலனினதும் முகத்தைப் பார்த்தார் பேராசிரியை. இருவருமே பருவ வயதை உடையவர்கள். கண்களில் ஆவலும் பருவ வயதிற்கான காதலும் துளிர்விடுவதை உணர்ந்தார்.தன் வயதினர் போல் அவர்களிடம் பேசாமல் சற்று வேறு ஏதும் பேசலாம் என்று பேச்சை மாற்ற எண்ணினார்.
பி.எச்.அப்துல் கமீத்,கே.எஸ்.ராஜா,இராஜேஸ்வரி சண்முகம் இவர்களது  பாணியில் வானொலி நிகழ்ச்சிகளைத் தொகுப்பது போல் பேசிக் காட்டினார்.'மேலூர்தான் எங்கள் ஊர்.பள்ளிவிட்டு வந்ததும் ஐந்து முப்பதிலிருந்து ஆறு மணி வரைக்கும் எங்கள் அம்மா பாட்டுக் கேட்பார்கள். நாடாக்கட்டிலில் அமர்ந்தும் விளையாடியபடியும் அந்தப் பாடல்களைக் கேட்போம்.அந்த வளமைமிக்க சொற்கள் தமிழ்நாட்டில் கூடக் கேட்கக் கிடைக்காது.நாங்கள் எல்லோரும் சிலோன் வானொலிப் பைத்தியங்கள்.
தொலைக்காட்சி வருவதற்கு முன் அதில் சில கதைகளை அந்தப் பாத்திரங்கள் போலப் பேசி நடிப்பார்கள். அதன் பின்னணியில் இசையும் ஒலிக்கும், அதற்குப் பெயர் இசையும் கதையும்.எத்தனை இன்பம் நிரம்பிய காலகட்டம் அது.நான் கல்லூரி வருவதற்குள் எல்லாம் திசைமாறி எங்களுக்கு பித்துப் பிடித்தது போலாயிற்று. 71களிலேயே மணல்தேரியில் காத்துக்கிடந்து கிடைத்த படகில் வந்ததாகச் சொன்ன நீலாக்கா எங்கள் வீட்டில் பலவருடம் வேலை பார்த்தார்.83 ஆவணி 3 ஞாபகம் இருக்கு.கல்லூரியில் இருந்து விடுமுறைக்கு வீட்டுக்கு வந்த நாங்கள் 20 நாட்கள் கல்லூரிக்குச் செல்லவில்லை.
கலவரம் பற்றிக் கேள்விப்பட்ட நீலாக்கா வந்தபோது,  தன்னைப் படகில் ஏற்றிவிட்டு இடம் இல்லாமல் அங்கேயே தங்கிவிட்ட அப்பாவின் ஞாபகம் வந்து கதறி அழுதார்'என்றார்.அவர் கண்கள் லேசாகக் கசிந்திருந்தன.
பேராசிரியை யதார்த்தமானவர் நகைச்சுவை உணர்வுமிக்கவர். மீண்டும் அவர்கள் முகம் தீவிரமாவதைக் கண்டு போர்த்துக்கேயர் விட்டுச் சென்ற பைலாப் பாடல் மெட்டில்' சின்ன மாமியே உன் சின்ன மகளெங்கே பள்ளிக்குச் சென்றாளோ படிக்கச் சென்றாளோ'எனப் பாடவும் புன்னகை புரிந்தார்கள்.
„கள்ளுக்கடைப் பக்கம் போகாதே உன் காலைப் பிடித்துக் கெஞ்சுகிறேன்' என்று அவர் சிலோன் பொப்பிசைப் பாடலை அபிநயம் பிடித்துப் பாடவும் ,குபுக்கென்று சிரித்தார்கள்.
„அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே கேள்வி ஒன்று கேட்கலாமா உனைத்தானே இருமனம் ஒரு மனம் ஆகும் திருமணம் அப்போது ஆகும் செலவிற்கு வழி யாது என்கிறாய் கேள்வி அதுதானே' என்று சேமிப்புப் பற்றிப்  பாடும் பாடலைச் சொல்லும் போது அவர்கள் இருவரும் நாணத்தோடும் சங்கோசமாகவும் சிரித்த முகத்தோடு ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்வதை உணர்ந்தார்.
இந்தக் காதல்தான் மனிதர்களை எப்படி ஆட்டிப் படைக்கிறது.ஒருவர் ஒருவர் கண்ணாலேயே விழுங்கச் செய்கிறது.ஒருவருக்காக ஒருவரை துடிக்கச் செய்கிறது. மாயக்காரன் கோல் போல் உலகில் எங்கிருந்தாலும் தொட்டுவிட்டு வருகிறது. உணர்வுகளால் ஒன்றியவர்களை கண்டங்கள் பிரிக்க ஏலமா. காதல் போயின் காதல் போயின் சாதல் என்று எழுதி வைத்தானே முண்டாசுக் கவிஞன்.
காதல் மனிதரைத் தோல் போலாக்குமா......ஆக்கி இருந்ததே அந்த பிரிவுத் துயர்.பசலை படிந்த தோற்றத்தில் பத்மகலா.அவருக்கே நம்ப முடியவில்லை. மூன்று வருடங்களுக்கு முன் பார்த்தவளா இவள்.....இங்கே எப்படி...
நேற்று கனடாவில் தமிழ்ச்சங்கத்தின் பேரில் சென்றிருந்த அவர்'தமிழ்ச்சித்தர்களும்மூலிகை மருத்துவமும்'என்ற தலைப்பில் அகத்தியரின் செங்கடுக்காய் கற்பம்,கருவூரானின் நாறுகிரந்தைக் கற்பம்ஆகியவற்றை விரிவுரையாற்றிக் கொண்டிருந்தார். கனடாவில் பிறந்த வில்லியம் ஆஸ்லே என்ற ஆங்கில மருத்துவர்கூட நம் தமிழ்ச்சித்த வைத்தியப் பாணியில் நோய் நாடி நோய் முதல் நாடி என்பது போல எப்படிப்பட்ட வியாதியை நாம் குணப்படுத்துகிறோம் என்பதைவிட நோயாளிகள் எப்படிப்பட்டவர்கள் என்பதை முடிவு செய்து மருந்து கொடுப்பதே சாலச் சிறந்தது என்று கூறியதையும் மேற்கோளாகக் கூறினார்.அப்போது ஆவலூறும் இரு விழிகள் அவரை மொய்த்துக் கொண்டிருந்தன. சில நிமட நினைவு மீட்டலுக்குப் பின் அவருக்கு ஞாபகம் வந்தது.
தன்னையே ஆவலுடன் பார்த்துக் கொண்டிருந்த அவள்......அவள்......அவள் 
யாழ் பல்கலைக் கழகத்தில் பார்த்த துடிப்பான பெண்..... நிகழ்வு முடிந்ததும் ஓடி வந்து கைகொடுத்த சிரித்தாள்.
„இங்கே எப்பொழுது வந்தாய்.....இங்கே படிக்கிறாயா....'
„புரொபஸர்....புரொபஸர்' என அழைத்து மரியாதையுடன் பார்த்தாள்...எதிர்பாராமல் பேராசிரியைச் சந்தித்த ஆச்சரியம் பத்மகலாவிற்கு....எதிர்பாராத சந்திப்பு தடுமாறினாள்....
„அங்கை எங்களால தொடர்ந்து படிக்க முடியவில்லை. சூழ்நிலை எங்களைத் துரத்திக் கொண்டேயிருக்குது.பல்கலைக் கழகத்தில் நடந்த சம்பவத்தில் எதிலுமே ஈடுபடாத சீலனைக் கைது செய்தார்கள். எனக்கு பாதி உயிர் அங்கேயே போய்விட்டது. நாங்கள் இருவரும் வௌ;வேறு நாடுகளில் அகதிகளாக இருக்கிறம். நான் இப்ப இங்கை அக்கா வீட்டிலை இருக்கிறன். இருவரும் உயிரோடிருக்கிறம். ஊரிலை விட்ட மருத்துவப் படிப்பை இங்கை தொடருகிறன். அவர் சுவிஸில் மக்டொனசில் வேலை செய்கிறார்.வீட்டிலை முரளி என்பவரைத் திருமணம் செய்யச் சொல்லி அக்கா வற்புறுத்துகிறார்.என்ன செய்வதென்று புரியல...'என்றாள்.
கொழுகொம்பில் இல்லாத கொடி துவண்டு நிற்பதைப் பார்த்தது போல பேராசியை மங்கையற்கரசிக்கு வருத்தமாக இருந்தது.
„சீட் பெல்ட்களை அணிந்து கொள்ளுங்கள்'விமானத்தில் அறிவிப்பு வந்ததும் சிந்தனைகளில் இருந்து வெளிவந்த மங்கையற்கரசி பக்கத்திலிருந்த பெண்ணைப் பார்த்து முறுவலித்தார்.விமானம் தரை இறங்கியது.அவள் குடும்பத்தாரைச் சந்திக்கப் போகும் பரபரப்பில் இருந்தாள்.
தொடரும்  29

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here