
பிறக்கின்ற புத்தாண்டு 'மன்மத' என்ற பெயரில் பிறக்கின்றது. 'மன்மதன்' என்றாலே அனைவருக்கும் மகிழ்ச்சி ஏற்படும். காரணம், மன்மதனின் அருள் இருந்தால் தான் சகல ஜீவ ராசிகளுக்கும் இனப்பெருக்கம் ஏற்படும்.
ரதியும், மன்மதனும் அழகில் சிறந்தவர்களாக போற்றப் பட்டார்கள். கரும்புவில் கையில் வைத்திருக்கும் மன்மதனின் பாணம் பட்டால் அரும்பும் அன்பும் மலரும், ஆனந்த வாழ்க்கை அமையும். எனவே பலரின் கல்யாணக் கனவுகள் நனவாகும் ஆண்டாகக்கூட இந்த ஆண்டைக் கருதலாம்.
பிறக்கும் புத்தாண்டு கடக லக்னத்தில் பிறக்கின்றது. லக்னாதிபதி சந்திரனை லக்னத்தில் உச்சம் பெற்று சஞ்சரிக்கும் குரு பகவான் பார்க்கிறார். எனவே, குரு சந்திர யோகத்தோடும், குரு பார்க்கும் ராசியாகவும், குரு ஓரையிலும் புத்தாண்டு பிறப்பதாலும் 'குரு பார்க்க கோடி நன்மை' என்பதற்கேற்ப சகல யோகங்களும் மக்களுக்கு வந்து சேரப் போகின்றது.
'மன்மத' வருடம் என்பதால் மகிழ்ச்சியான வாழ்க்கையை மக்கள் காண்பர். தாமதப்பட்ட கல்யாணங்கள் தடையின்றி நடைபெறும். இனப்பெருக்கம் அதிகரிக்கும். அதே நேரத்தில் பணப்பெருக்கமும் அதிகரிக்கும் விதத்தில் சுக்ர பலம் நன்றாக இருக்கிறது. தமிழ் வருடங்கள் அறுபதில், 29-வது வருடமாக வருவது தான் மன்மத ஆண்டு. இந்தப் புத்தாண்டு சித்திரை மாதம் முதல் தேதி 14.4.2015 கிருஷ்ண பட்சம், தசமி திதியில், சுபநாம யோகம், அவிட்டம் நட்சத்திரம் 2-ம் பாதத்தில் மகர ராசியில், கடக லக்னத்தில் மதியம் 12.18-மணிக்கு குரு ஓரையில் பிறக்கின்றது.
பிறக்கும் பொழுது குரு, சூரியன் உச்சம் பெற்றிருக்கிறது. செவ்வாய், சுக்ரன் ஆகியவை சொந்த வீடுகளில் சஞ்சரிக்கிறார்கள். குருசந்திர யோகம், புத-ஆதித்ய யோகம் ஆகியவையோடு பஞ்ச பட்சியில் மயில் நடைபயிலும் நேரத்தில் வருடம் பிறப்பதால் நாட்டு மக்கள் நலம் பெறவும் நல்ல வாய்ப்புகள் இல்லம் தேடி வரவும், கூட்டு முயற்சிகளில் வெற்றி கிடைக்கவும், கொள்கைப் பிடிப்போடு செயல்படவும் வழிவகுக்கப் போகின்றது.
'மன்மத வருட வெண்பா பாடல்'
முற்காலத்தில் வருடாதி வெண்பா என்ற தலைப்பில் ஒவ்வொரு வருடத்திற்கும் உரிய பாடலாக இடைக்காட்டு சித்தர் எழுதிய பாடல் இது.
மன்மதத்தில் மாரியுண்டு வாழுமுயிரெல்லாமே
நன்மைமிகும் பல்பொருளை நண்ணுமே
மன்னவரால்
சீனத்திற் சண்டையுண்டு தென்திசையிற்
காற்றுமிகும்
கானப்பொருள் குறையுங் காண்.
பொருள் : இந்த மன்மத ஆண்டில் நல்ல மழை பொழியும். மரம், செடி, கொடி, விலங்கு, பறவை மட்டுமல்லாமல் அனைத்து உயிர்களும் நலமுடன் வாழும். மக்களும் மகிழ்ச்சியுடன் வாழ்வார்கள். நல்லதெல்லாம் நடைபெறும்.
பலவகையான தானியங்கள், பயிர்கள் விளைச்சல் அமோகமாக இருக்கும். நாடாளும் நபர்களுக்கு போர் குணம் அதிகரிக்கும். அதன் விளைவாக உலகின் ஒரு பகுதியில் பிரச்சினைகள் உருவாகும். தென் திசையிலிருந்து புயல் உருவாகி சூறாவளிக் காற்றாக வீசும். இதன் விளைவாக மிக அரிதான விளைபொருட்கள், மூலிகைகள் சேதமடைந்து குறையலாம்.
பாடலின் பொருளை பார்க்கின்ற பொழுது நமக்கு மிகவும் மகிழ்ச்சியாகத்தான் இருக்கின்றது. மழைக்காக ஏங்கி மக்கள் தவிக்கும் சூழ்நிலையில் மழை வளம் பெருகும் என்று முதல் சொல்லாகவே குறிப்பிட்டிருப்பது மகிழ்ச்சியைக் கொடுக்கிறது. அதே நேரத்தில் சூறாவளிக் காற்று, இயற்கை சீற்றங்களின் விளைவாக காட்டில் விளையும் அற்புதப் பொருட்கள் சேதமடையும் வாய்ப்பு உண்டு என்று குறிப்பிடப்படுகின்றது.
No comments:
Post a Comment