
விழுதல் என்பது எழுகையே
எழுதியவர்: திருமதி.சுபாஜினி ஸ்ரீரஞ்சன்
தொடர் - 48 தொடர்கிறது
நேரம் 11 மணி….,
இளம் சூரியன் பொற்கரம் பரப்பி தன்னொளி பரப்பிக் கொண்டிருந்தான்.
சீலனின் நெஞ்சம் மெல்ல இளம் தொடங்கியது..நினைவுகள் முழுவதும் பத்மகலாவைப் பற்றியே!! ஒரு முறை பேசினால் ஒரு முடிவுக்கான பாதை திறபடும் என தொலைபேசி அழைப்பை ஏற்படுத்த முனைந்தான்.
மறு முனையில் கலா........
'கலா எப்படி இருக்கிறீங்க என தொடங்க முதலே வார்த்தைகள் சிக்கிக்கொண்டது எத்தனையோ விடயங்களை பேச வேண்டும் மனதில் உள்ள அத்தனையையும் கொட்டித் தீர்க்க வேண்டும் என எண்ணிக் கொண்டே வந்தவன், முடியாமல்…….,
தவித்தான்.கறுப்புத் திரை ஒன்று கண் முன்னே விழுந்தது போல் உணர்ந்தான் . இருந்தும் தன்னை சுதாகரித்துக் கொண்டு பத்மகலாவோடு உரையாடினான்.
தாயாரின் கல்யாணப் பேச்சை போட்டுடைத்தான். மறுமுனையில் பத்மகலா மயக்கம் போடாத குறையாக வார்த்தைகள் தடுமாற கண்ணில் கண்ணீர் சொரிவதை வார்த்தைகள் மூலம் புரிந்தான்.
இருவருடைய கண்ணீர் ஒரு பெருந் துன்பத்தை விலக்கியது.
பத்மகலா மனம் விட்டுப் பேசினாள்.
'என் மனதில் கணவராக வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள் எப்படி எப்படி இதை என் மனம் ஏற்றுக் கொள்ளும் ' என விம்மி விம்மி அழுதாள்.
பத்மகலாவிற்கும் வீட்டார் பாரிய அழுத்தத்தை கொடுத்துக்கொண்டே இருந்தனர் அவளுடைய திருமணத்திற்காக ......இப்பொழுது சிலனும் பத்மகலாவும் ஒரே புள்ளிக்குள் வருகின்றனர் .. காதல் ஏற்படுத்திய வலி..இது.
இழந்துவிட்ட கல்வி..... திருமணத்திற்கான பெற்றோரின் அழுத்தங்கள்......
ஒரே வலியை கொண்டிருக்கும் இருவரும் இணைவதில் எவ்வளவு சிக்கல்!! வாழ்க்கை ஒரு போர்க்களம் என மாறியது .................
சீலனுக்கு பத்மகலா மீது அளவு கடந்த பரிதாபமும் இரக்கமும் ஏற்பட்டது.
எந்தப் பெண்ணும் தான் விரும்பியவரை யாரவது மணம் முடிப்பதை தாங்க மாட்டாள் என்பதை சீலன் உணர்ந்து கொண்டான்.சீலன் கிடைக்காது போனால் உயிர் வாழமாட்டேன் எனக்கூறியது சீலனை மிகவும் பாதித்தது.
சகோதரியுடன் கூடப் பிறந்தவன் தாயை உயிராக மதிப்பவன் இரக்க குணம் கொண்டவன் பத்மகலாவின் உணர்வுகளை புரிந்து கொள்ளாமல் இல்லை எனினும் அவள் அள்ளி வீசிய வார்த்தைகள் இடையிடையே வந்து வெறுப்பையும் ஏற்படுத்த தவறியதில்லை. இப்படியான சோகங்களும் பிரிவுகளும் தான் உறவுகளை பலப்படுத்தும் எனவும் உணர்ந்து கொண்டான்.
பாசமும் சோகமும் உடலையும் மனதையும் வாட்டியது !மயிர்க்கணுக்கள் கூச்செறிந்தது!! இந்த சோக உணர்விலும் சுகம் இருந்தது.
வாழ்க்கை என்பது ஒரு அழகான பரிசு
ஒவ்வொருவருக்கும ;கிடைத்த சந்தர்பத்தை பயன்படுத்தி தெரிவு செய்யும் உரிமை இருக்கிறது எனக்கு கிடைத்த சந்தர்ப்பத்தில் என்னுடைய வாழ்க்கையை தெரிவு செய்ய நான் தானே முன் வர வேண்டும் என தெளிவோடு துணிவு கொண்டான்.
வானம் வெளிப்பாக இருந்தது.வெளியே சென்று எதாவது மரக்கறிகள் வேண்டி சமைக்க வேண்டும் என நினைத்து ஆயத்தமாகினான்.அப்பொழுது வீட்டை தட்டும் சத்தம் கேட்டது, யாராக இருக்கும் என யோசித்தபடி கதவை திறக்க முன் சென்றான்.அங்கே நன்கு பழக்கப்பட்ட முகம் தான்.சீலனோடு மாலைக் கல்விக்கு செல்லும் சக தோழன் நிறையவே வயது வித்தியாசம் கொண்டவர் பெயர் சத்தியநாதன்.
மிகவும் நல்ல பண்புகளை கொண்ட மனிதர் சீலனிடம் நிறையவே மரியாதை கொண்டிருந்தார் சீலனும் அப்படியே .
அவர் வந்த காரணம் தனது மகள் குமுதாவின் 21வது பிறந்தநாளிற்கு அழைப்பதற்கு .சீலன் நாளுக்கு ஒரு தடவையாவது குமுதாவை வழியில் பார்ப்பதுண்டு. மெல்லிய புன்னகை கண்களில் காதலும் ஏக்கமும் நிரம்பி வழிகின்ற சிறு பார்வையில் நாணம் கலந்திருக்கும்.சீலனுக்கு அந்தப் பார்வை பிடித்துப் போய்விடும்.
வாழ்க்கை வெறுக்கின்ற போதெல்லாம் இந்த் சின்னச் சின்ன விசயங்கள் உயிர்ப்பைக் கொடுக்கும். சில வினாடிகள் அந்த நினைவுகளின் சென்று மீண்டு அவரை வழியனுப்பி விட்டான் பிறந்த நாளுக்கு வருவதாகவும் உறுதி கொடுத்தான்.
சீலனுடைய நற்குணங்கள் அறிவு பெரியவர்களை மதிக்கும் பண்பு என்பவை மிகவும் சத்தியநாதனை கவர்ந்தவை இந்த நோக்கம் கருதியோ என்னவோ தனது மகளை சீலனுக்கு கட்டிக் கொடுக்க வேண்டும் என பெரு விருப்பு.
எப்படிச் சீலனை கேட்பது என திண்டாட்டம். பிறந்த நாள் அழைப்பும் சீலனின் வருகையும் குடும்பத்தில் பிணைப்பை ஏற்படுத்தும் எனவும் தனது உறவினர்களும் சீலனை பழக வாய்ப்பு இருக்கும் எனவும் பல திட்டங்களை வைத்திருந்தார்.
குமுதா மருத்துவ மனையிலே தாதியாக பணி புரிகின்றாள். தொழிலுக்கு ஏற்றது போல பணிவடக்கமும் துணிச்சலும் உள்ளவள்.இவளும் சீலனுக்கு பொருத்தமானவளே.சில வேளைகளில் டொச் பாடத்தில் ஏதாவது சந்தேகங்களையும் தெளிவு படுத்தியிருக்கிறாள்.
சத்தியநாதன் மனதோடு பிரார்த்தித்துக் கொண்டிருந்தார்.தனது மகளுக்கு சீலன் மணமகனாக வரவேண்டும் எனவும் அவளுடைய வாழ்க்கை சிறப்பாக அமைய வேண்டும் எனவும் சீலன் போல் ஒரு பொருத்தமான மாப்பிள்ளையை தவறவிட்டு என் மனது தவிப்பதிலும் பார்க்க வெட்கத்தை விட்டு கேட்கவேண்டும் என உள்ளூர நினைத்துக் கொண்டார்.
சீலன் தனது காதலை பலப்படுத்திக் கொள்ள அக்கம் பக்கமெல்லாம் அவனுக்கு பல வரன்கள். அம்மாவின் கனவு அவள் பார்த்து வைத்த சாம்பவி என்ற அழகான உறவுப் பெண் பெரிய சீதனத்தோடு.
தன் மனதிலே உயிரோடு கலந்து இடம் பிடித்த பத்மகலா சத்தியநாதனின் மகள் குமுதா.
திரும்பத் திரும்ப அதையே யோசித்துக் கொண்டிருந்தான். எத்தனை நாடுகளுக்கு தாவி விட்டேன் எத்தனை மனிதர்களை சந்தித்து விட்டேன் இது விதியா?. இதற்கு மூலத்தை காண்பது எப்படி அவை எல்லாம் தானாகவே வருகிறதா அல்லது நானாகத்தேடிக் கொண்டேனா?
காதலித்தது....... படிப்பு குழம்பியது...... வெளிநாடு வந்தது..............புதிய மனிதர்களை சந்தித்து புதுப் புது உறவுகளை தேடியது?....................
எல்லாவற்றையும் விட்டு விட்டு கண்களை இறுக மூடிக் கொண்டான் .
சீலன் இப்பொழுதெல்லாம் நல்ல சிந்தனையை உருவாக்கி திடமாக மனதை வைத்துக் கொள்ள பழகிவிட்டான்.முன்பெல்லாம் சிறு பிள்ளை போல் அடிக்கடி கண்கலங்கி அழுவதற்கான காரணங்களாக பாசங்களை விட்டுப் பிரிந்த வலி
கல்வியை தொடர முடியாத அவலம் காதலியை பிரிந்த துன்பம் இவை எல்லாவற்றுக்கும் கண்ணீரை மருந்தாக்கி தன்னைத்தானே ஆற்றுப் படுத்திக் கொண்டான்.இருந்தும் வருகின்ற துன்பங்களை எப்படி களைவது என யோசித்து அவதானமாகவே பல முடிவுகளை எடுப்பான். எடுக்கின்ற முடிவுகள் எல்லாம் திருப்தியாக முடிவதும் இல்லை இருந்தும் ஏற்றுக் கொள்ளப் பழகிவிட்டான்....,,,.....,,... ......
வார விடுமுறை பல அலைச்சல்களோடு போய் விட்டது.சீலன் தெரிவு செய்த மெக்கானிக் படிப்பு நன்றாகவே போய்க் கொண்டிருந்தது அது சம்மந்தப்பட்ட மேலதிக கற்கைகளுக்கான வாய்ப்பும் கிடைத்து. எல்லாமே அவனுடைய முயற்சி தொழிலை நேசிக்கும் தன்மையும் நுணுக்கமான அறிவும் துணை நின்றன.வளர்ச்சியடைந்த நாடுகளின் தனிநபர் வருமானம் உயர்ந்ததாகவே இருக்கும் வாழ்க்கைத் தரமும் உயர்வானதாகவே இருக்கும் இவை இயல்பு நிலை பொருளாதார சூழல் என்றே கூறலாம்.
எங்களுடைய நாட்டில் படித்தது மட்டுமே...எங்களுடைய நாடு அபிவிருத்தியடைய எத்தனை காலங்களோ என மனதுக்குள் வேதனைப்பட்டதோடு,தன்னிறைவு காணும் நிலையை உணர்ந்தும் சமூகத்துக்கு பாரமில்லாமல் உழைத்து வாழும் தகுதியை பெற்றுவிட்டதையும் அத்தோடு இந்த நாட்டு சமூகச் சூழலோடு இசைவடைந்து வருவதையும் எண்ணி மகிழ்ச்சியடைந்தான்.
பருவத்தின் உணர்ச்சிகள் சஞ்சலப்படுத்தினாலும் கடந்து வந்த பாதைகள் கற்றுதந்த பாடங்கள் திடமான முடிவை எடுக்க சக்தியளித்தது.ஒரு வாரம் மின்னல் போல் கண்ணிலே வந்து மறைந்தது.
நாளை விடிந்தால் சனிக்கிழமை!!
பொன்னம்பல மாமா கல்யாண விடயமாக என்னோடு பேச வரும் வேளை என்ன பதிலை கூறுவது, அம்மாவின் கனவு சந்தோசம் எல்லாமே என் பதிலில் அடங்கியிருக்கிறது .
"கடவுளே ஒரு பதில் வேண்டும் "
தாய் சொல்லை தட்டாத தனையனா?
பத்மகலாவின் மனம் நிறைந்த காதலனா?..... மனம் குழம்பிக் கொண்டிருந்தான் .
எத்தனை இடத்தில் வீழ்ந்து வீழ்ந்து எழுந்து விட்டேன். இந்தக் காதலுக்கும் கல்யாணப் பேச்சுக்கும் முற்றுப் புள்ளி வைக்க என்னால் முடிய வில்லையே.
கடவுளே...,,,என நினைத்துக் கொண்டு அயர்ந்து தூங்கி விட்டான் .
பொன் மஞ்சள் பூசிக் குளித்த இளம் காலை பறவைகளின் இசையோடு விடிகிறது..இன்னும் கொஞ்ச நேரத்தில் அம்மாவின் தொலை பேசி அழைப்பு வரப்போகிறது.
பொன்னம்பல மாமா வராமல் இருக்க வேண்டும் என மனதுக்குள் பிரார்த்தித்துக்கொண்டே இருந்தான். பத்மகலாவும் ஒவ்வொரு சனிக்கிழமையும் தவறாமல் கதைப்பாள். அத்தோடு குமுதாவின் பிறந்த நாள் மாலை 4மணிக்கு போக வேண்டும். அங்கும் எதிர்கால மருமகனாக வரப்போகும் என்ற ஆசை உணர்வுகளை நிறைத்தபடி வரவேற்க காத்திருப்பு.
இன்று எனது காதலை சொல்லியே தீர வேண்டும். இல்லையேல் என்னுடைய எதிர்காலம் சஞ்சலமாகி விடும் அத்தோடு இன்றைய நாள் எனது வாழ்க்கை சம்மந்தப்பட்ட முடிவை எடுக்கும் நாள். இன்றைய சனிப்பலன் எப்படியோ? சீலன் சஞ்சலப் பட்டுக் கொண்டு இருக்கும் போது தொலை பேசி அழைப்பு மணி அடித்தது.அம்மாவாக இருக்கலாம்,பத்மகலாவாக இருக்கலாம் ,அல்லது வேறு புதுப் பிரச்சனையாக கூட இருக்கலாம்? சீலன் பதற்றத்தோடு
தொலை பேசியை கையில் எடுத்தான்.................!!
தொடரும் 49 எழுதுபவர்: திருமதி.அருண் விஜயராணி,அவுஸ்திரேலியா
No comments:
Post a Comment