மார்கழி மாதத்தின் பெருமையை எடுத்தியம்பும் திருவெம்பாவை விரதத்தை, சைவ சமயத்தவர்கள் மார்கழிமாதத்தில் வரும் திருவாதிரை நாளிற்கு ஒன்பது நாட்கள் முதல் "நோன்பை" ஆரம்பித்து பத்தாவதுநாள் திருவாதிரை (நட்சத்திரம்) அன்று நிறைவு செய்வார்கள்.
இந்நாட்களில் அதிகாலை எழுந்து நீராடி சுத்தமான ஆடை அணிந்து கோயில் சென்று சிவகாமி உடன் இருக்கும் நடராஜரைக் கண்டு அங்கு நடைபெறும் வழிபாட்டில் பங்குபற்றுவர். இந்நோன்புக் காலத்தில் ஒரு நேர உணவாக அவித்த உணவு மட்டுமே உண்பர்.
அந்தவகையில் எமது கிராமத்தில் உள்ள அனைத்து ஆலயங்களிலும் திருவெம்பாவை விரதமானது கடந்த 2014.12.27ம் திகதி சனிக்கிழமை ஆரம்பமாகி இன்று காலை தீர்த்தோற்சவத்துடன் நிறைவடைந்தது.
இன்று காலை ஸ்ரீ அம்பரைவில் பிள்ளையார் ஆலயத்திலிருந்து சுவாமி வெளியாகி கிராமத்தில் உள்ள ஆலயங்களை தரிசித்து ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தை வந்தடைந்தது . அங்கு பூசை நிறைவடைந்ததும் ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தில் உள்ள சுவாமியுடன் இணைந்து அலங்கரிக்கப்பட்ட உழவு இயந்திரத்தில் சுவாமியின் திருவீதியுலா இடம்பெற்று சேனைத்துறை(புளியடித்துறை) தீர்த்தத்துறையை வந்தடைந்தது. வரும் வழிதோறும் பக்த அடியார்கள் தங்கள் வாசலில் நிறைகுடங்களை வைத்து பெருமானை வழிபட்டனர் .
தொடந்து அங்கு திருவெம்பாவையில் உள்ள 20 பாடல்களும் பாடப்பட்டு ,அதனைத் தொடர்ந்து மு.ப 10 மணி சுப முகூர்த்த வேளையில் எம்பெருமான் தீர்த்தமாடியதுடன் ஆலயத்தில் பொன்னூஞ்சல் ஆடும் நிகழ்வும், அன்னதானத்துடன் இவ்வருட திருவாதிரை உற்சவம் இனிதே நிறைவு பெற்றது. இந்நிகழ்வில் பெருந்திரளான பக்த அடியார்கள் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment