கடந்த உயர்தரப்பரீட்சையில் கோட்டைக்கல்லாறு மகாவித்தியாலயத்தில் உயிரியல் பிரிவில் தோற்றி தேசிய ரீதியில் 6ம் இடத்தையும் மாவட்டரீதியில் 1ம் இடத்தையும் பெற்று எமது கிராமத்துக்கு பெருமை சேர்த்த மாணவன் ஏகாம்பரம் யுகேசன் அவர்களைப் பாராட்டும் பெருவிழாவானது இன்று (2015.03.23) காலை 11.00 மணியளவில் கோட்டைக்கல்லாறு மகாவித்தியாலய ஒன்றுகூடல் மண்டபத்தில் வித்தியாலய அதிபர் திரு இரா.செல்வராஜா அவர்கள் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கல்வி இராஜாங்க அமைச்சர் திரு வீ.இராதாகிருஷ்ணன் அவர்களும் கௌரவ அதிதிகளாக பாராளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராஜா, திரு சி.தண்டாயுதபாணி(கல்வி அமைச்சர் கிழக்கு மாகாணம்), திரு கே.துரைராஜசிங்கம்(விவசாய அமைச்சர் கி.மா), திரு மா நடராஜா(உறுப்பினர் கி.மா) ஆகியோரும், சிறப்பு அதிதியாக வலயக்கல்விப் பணிப்பாளர் திருமதி ந.புள்ளநாயகம் அவர்களும், விசேட அதிதிகளாக DR.நா.இதயகுமார் (பொது வைத்திய நிபுணர்), திரு ஏ.அருள்பிரகாசம்(நிலையைப் பொறுப்பதிகாரி தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை), திரு க.சோதீஸ்வரன் (பாடசாலை அபிவிருத்தி சங்கம் கோ.க.ம.வி), திரு க.செல்வராஜா அதிபர்(மட்/கோ.கோ.க.தி.வி),திரு கே.இராஜசேகர்(அதிபர் மட்/கோ.க.க.வி) ஆகியோரும் கலந்து கொண்டனர்.
அதிதிகள் அனைவரும் அம்பாரைவில் பிள்ளையார் ஆலய முன்றலில் இருந்து பாண்டு வாத்திய மரியாதையுடன் ஒன்றுகூடல் மண்டபத்திற்கு அழைத்துவரப்பட்டனர்.
நிகழ்வானது சம்பிரதாய பூர்வமாக மங்கள விளக்கேற்றல்,இறைவணக்கம் என்பவற்றுடன் ஆரம்பமானது. மாணவிகளின் கணீர் என்ற குரலில் தமிழ் மொழி வாழ்த்தும், பாடசாலை கீதமும் பாடப்பட்டது. அதனைத்தொடர்ந்து வரவேற்புரை ஓய்வு நிலை அரச அதிபர் திரு சி.சண்முகம் அவர்களினால் வழங்கப்பட்டது.
இன் நிகழ்வில் தலைமையுரை ஆற்றிய வித்தியாலய அதிபர் இரா.செல்வராஜா யுகேசனின் பணிவே அவனின் உயர்வுக்கு காரணம் என்றும் பாடசாலையில் விஞ்ஞான ஆய்வுகூட வசதி இல்லாமை பெரும் குறையாக இருக்கின்றமையையும் குறிப்பிட்டார். இக் குறை நிவர்த்திக்கப்பட்டு இருக்குமேயானால் இன்னும் சில மாணவர்கள் வைத்திய துறையில் காலடி பதித்திருக்கக்கூட்டும் எனவும் இக் குறையை நிவர்த்திசெய்து தருமாறு அமைச்சர்களிடம் வேண்டுகோள் விடுத்தார்.
இங்கு சிறப்பு அதிதியாக கலந்து சிறப்பித்த வலயக்கல்விப் பணிப்பாளர் திருமதி ந.புள்ளநாயகம் அவர்கள் தனது உரையில் ஒரு மாணவன் எவ்வாறு இருக்க வேண்டுமென்பதற்கு உதாரணமாக யுகேசன் விளங்குகின்றார் எனவும் 2011ம் ஆண்டு கோட்டைக்கல்லாறு மகாவித்தியாலயத்தில் சாதாரண தரத்தில் 80% இற்கு மேல் சித்தி அடைவு மட்டத்தை கொண்டதன் பின் இப் பாடசாலையில் உயிரியல் பிரிவு ஆரம்பிக்கப்பட்டது. இருந்த போதிலும் விஞ்ஞானப் பிரிவு ஆசிரியர்கள், பௌதீக வள பற்றாக்குறையின் மத்தியில் இப் பாடசாலை உயர்தரத்தில் 68% மேல் சித்திபெற்றுள்ளது சாதனையே எனக் குறிப்பிட்டார்.
இன்நிகழ்வில் யுகேசனை கௌரவித்து உரையாற்றிய கௌரவ கல்வி இராஜங்க அமைச்சர் வி.இராதக்கிருஷ்ணன் அவர்கள். "ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன்மகனைச் சான்றோன் எனக்கேட்ட தாய்" எனும் வள்ளுவனின் குறளுக்கு அமைய பெற்றோருக்கும், தான் பிறந்த மண்ணுக்கும் பெருமை சேர்த்துள்ளார் எனவும். இக்கிராமத்தின் பெருமையையும் மாவட்டத்தின் பெருமையையும் முழு நாட்டிற்கும் கொண்டு சென்ற இம் மாணவனை வாழ்த்துவதோடு இம் மாணவனை பெற்ற பெற்றோருக்கு தனது நன்றிகளை தெரிவித்தார்.'
மற்றும் இம் முறை 5ம்தர புலமைப்பரிசில் பரீட்சையில் சித்திபெற்ற மாணவர்களுக்கு பரிசில்களும் வழங்கிக் கௌரவிக்கப்படது.
நிகழ்வில் DR. நா.இதயகுமார் (பொது வைத்திய நிபுணர்) அவர்களின் சேவையைப் பாராட்டி பாராட்டுப்பத்திரமும் பொன்னாடை போர்த்தி கௌரவமும் வழங்கப்பட்டது
No comments:
Post a Comment